Saturday, November 18, 2017

இந்தியாவில் 18 பணக்காரக் குடும்பங்கள்!

SHARE

ஆசியாவின் அதிக 50 சொத்துமிக்க குடும்பங்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் அம்பானி உட்பட இந்தியாவின் 18 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா, மகன்கள் ஆகாஷ் & ஆனந்த், மகள் இஷா ஆகியோர் அடங்கிய அம்பானியின் குடும்பச் சொத்து மதிப்பு 44.8 பில்லியன் டாலர்களாக (இந்திய ரூபாயில் ரூ.2,91,262.27 கோடி) உள்ளது. இதன் மூலம் ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சொத்துமிக்க ஆசியாவின் 50 குடும்பங்களின் பட்டியலில் அம்பானியின் குடும்பம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அம்பானியின் குடும்பச் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. அம்பானியின் குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 18 இந்தியக் குடும்பங்கள் இந்த ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிக சொத்துமிக்க குடும்பங்களைக் கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 9 சொத்துமிக்க குடும்பங்களுடன் ஹாங்காங் இப்பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது.

கடந்த ஆண்டில் 11.2 பில்லியன் டாலர் உயர்வைச் சந்தித்த கொரியாவின் சாம்சங் நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான லீ பியுங் சுல் குடும்பமானது மொத்தம் 40.8 பில்லியன் டாலர் (ரூ.2,65,215.91 கோடி) சொத்து மதிப்புடன் ஆசியாவின் அதிக சொத்துமிக்க குடும்பங்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியின் குடும்பம் (ரூ.1,24,807.48 கோடி) 11ஆவது இடத்திலும், ஹிந்துஜா குழுமத் தலைவர் எஸ்.பி.ஹிந்துஜாவின் குடும்பம் (ரூ.1,22,226.69 கோடி) 12ஆம் இடத்திலும், லக்‌ஷ்மி மிட்டல் குடும்பம் (ரூ.1,11,806.70 கோடி) 14ஆவது இடத்திலும், சிரஸ் மிஸ்ட்ரியின் குடும்பம் (ரூ.1,04,656.27 கோடி) 16ஆவது இடத்திலும், குமாரமங்களம் பிர்லா குடும்பம் (ரூ.91,670.02 கோடி) 19ஆவது இடத்திலும் உள்ளன.
SHARE