Monday, November 20, 2017

யாழ்.போதனா வைத்தியசாலையில் 50 சிறுவர்கள் நீரிழிவுக்காக சிகிச்சை பெறுகிறார்கள்!

SHARE

யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் நீரிழிவுச் சிகிச்சை நிலையம் வடமாகாணத்திலேயே மிகப் பிரதானமானதொரு நீரிழிவுச் சிகிச்சை நிலையம். எங்கள் சிகிச்சை நிலையத்தில் 50 சிறுவர்கள் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலையின்

நீரிழிவு மற்றும் அகம்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்தியக் கலாநிதி மகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் உலக நீரிழிவு தின நிகழ்வுகள் நேற்றுச் சனிக்கிழமை முற்பகல் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

எமது சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைபெறும் சிறுவர்களுக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் கருவி எமது வைத்தியசாலையில் இல்லாதது முக்கிய பிரச்சினையாகவிருந்து வந்தது. இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொன்னபோது யாழ்.நீரிழிவுக் கழக உறுப்பினர்களும் மற்றைய உறுப்பினர்களும் அந்தக் கருவிகளை இலவசமாக எங்களுக்கு பெற்றுத்தருவதற்கு உதவி செய்தார்கள்.

மிக அதிகமான உடற்பருமனுடன் பாடசாலைச் சிறுமிகள் எமது நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் தினமும் வருகை தருகிறார்கள். இளம்பெண்களின் உடற்பருமன் அதிகரிக்கும் போது பல விதமான நீண்டகாலப் பிரச்சினைகள் உருவாகும். குறிப்பாக பெண்கள் கர்ப்பம் தரிப்பதிலும் மகப் பேறின் போதும் பல பிரச்சினைகள் உருவாகும்.

எனவே இளம்பெண்கள் அதிலும் பாடசாலையில் கல்வி கற்கின்ற பெண்கள் தொடர்ந்தும் கட்டுப்பாடான உடல் நிறையில் காணப்படுவதை தாம் உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதற்கு பாடசாலை அதிபர், ஆசிரியர், கல்வியமைச்சு, சுகாதாரத் திணைக்களம் என்பன பொருத்தமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் வரலாம் எனவே குறிப்பிட்ட வயதை அடைந்ததும் நீரிழிவுப் பரிசோதனையை மேற்கொள்வது இன்றியமையாதது.

நாங்கள் பாடசாலை மற்றும் சமுதாய மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். மாகாண சுகாதார அமைச்சு மற்றும் யாழ்.பல்கலைக்கழக சமுதாய மருத்துவத் துறை, யாழ்.நீரிழிவுக் கழகம் போன்றன ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன.
SHARE