Thursday, November 16, 2017

ஜிம்பாப்வேவில் புரட்சி: ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்!

SHARE

ஜிம்பாப்வேவில் புரட்சியில் ஈடுபட்ட ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடந்த 1980ஆம் ஆண்டு முதல் ராபர்ட் முகபே அதிபராக இருந்துவருகிறார். இந்நிலையில், அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாகக் கூறித் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை சமீபத்தில் முகபே பணி நீக்கம் செய்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று (நவ.15 ) அதிகாலை தலைநகர் ஹர்ரேவை ராணுவம் சுற்றி வளைத்தது. அரசு ஊடகத் தலைமையகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ராணுவம் அதிபர் ராபர்ட் முகபேவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது. அவரது மனைவி கிரேஸ் முகபே நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாகத் தகவல் வெளியான நிலையில் இதை ராணுவம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக ராணுவ மேஜர் ஜெனரல் மோயோ, அரசு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், “அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக உள்ளனர். இது ஆட்சி கவிழ்ப்பு கிடையாது. அதிபரைச் சுற்றியுள்ள குற்றவாளிகளை மட்டுமே ராணுவம் குறிவைத்துள்ளது. நாட்டில் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்துபவர்களை நீதியின் முன் நிறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களின் இலக்கை அடைந்த பின். பழைய நிலைக்கு நாடு திரும்பும். எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜிம்பாப்வேவில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகள் ஜிம்பாப்வேவில் நிகழும் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றன.
SHARE