வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்திருந்த கடைகளுக்கு இன்று திங்கட்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பில் பள்ளிவாசலில் உள்ள ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஒன்றுகூடிய மக்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இரண்டு கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் இரண்டு கடைகள் பகுதியளவில் எரிந்துள்ளன.
குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் இச்சம்பவம் குறித்து கூறுகையில், “பெற்றோல் குண்டே பயன்படுத்தப்பட்டதாக இப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் இக் கடைகளை அகற்றுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாகவும் அதன் தொடராகவே இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு ஒரு முடிவை காண்போம். வவுனியாவில் எல்லோரும் ஒற்றுமையாகவும் சகவாழ்வோடும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். அன்றைய ஆர்ப்பாட்டம்கூட நேரடியாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செய்யவில்லை. வெளியில் இருந்து வந்தவர்களே செய்தனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டும்” என கூறினார்.