மனித வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு கலைகள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. கதைகள், பாறை ஓவியங்கள், சிற்பங்கள், இலக்கியங்கள் என தனது சிந்தனைகளை கலை வழியாகவே மனிதன் கடத்தியிருக்கிறான். இதில் இந்த காலகட்டத்துக்கான கலை சினிமாவாகத்தான் இருக்கமுடியும். சினிமா பல்வேறு கலைகளை தனக்குள் கொண்ட அபூர்வ கலை. ஒரு கருத்தை ஒரே நேரத்தில் உலகம் முழுக்க கொண்டு சேர்க்க சினிமாவால்தான் முடியும்.
இதை புரிந்துகொண்டு புத்தமத சிந்தனைகளை தனது படங்கள் மூலம் கையாள்பவர் பூட்டானைச் சேர்ந்த இயக்குநர் Khyentse Norbu. அடிப்படையில் புத்தமத துறவியான இவரது Travellers and Magicians படம், தனது கலாசாரங்கள் பாரம்பர்யங்களை மறந்து வெளிநாட்டுக்குச் செல்ல துடிப்பவர்களை பற்றிய கதையைக் கொண்டது. நிகழ்காலத்தையும் புத்தமத கதையையும் இணைத்து திரைக்கதை அமைத்திருப்பார். சினிமா குறித்த அவரது பார்வையை பின்வருமாறு பதிவு செய்கிறார்.
சினிமா என்பது ஓர் ஊடகம். பௌத்தம் ஒரு விஞ்ஞானம். ஒருவரால் திரைப்படத்தை இயக்கிக்கொண்டு விஞ்ஞானியாகவும் இருக்க முடியும். நான் சினிமாவை நவீன கால புத்தமத ஓவியமாகப் பார்க்கிறேன்.