Sunday, November 26, 2017

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விநியோகம்!

SHARE

‘தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மண்டல தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும்’ என மதுரை மண்டல அதிகாரிகள் மணீஷ்வரராஜா, அருண்பிரசாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலராக இருந்த மணீஷ்வரராஜா, பதவி உயர்வில் குஜராத்தில் மத்திய அரசு இயக்குநரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக அருண்பிரசாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலராக நேற்று முன்தினம் (நவம்பர் 24) பொறுப்பேற்றுக் கொண்டார். இருவரும் மதுரையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, “இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸ்அப் மூலமாக பொதுமக்கள் பாஸ்போர்ட் தொடர்பான குறைகளைத் தெரிந்து கொள்ளும் வசதி, மதுரை மண்டலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதுபோல நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்போர்ட் சார்ந்த சந்தேகங்கள், குறைகள் மற்றும் விண்ணப்பத்தின் நிலையை மிகச் சுலபமாக அறிய புதிய தொழில்நுட்பங்கள், ட்விட்டர், முகநூல், ஸ்கைப் ஆகிய சேவைகள் கொண்டும் அறிந்துகொள்ள வசதி உள்ளது. மண்டல அலுவலகத்தின் கீழ்வரும் அனைத்து மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. வேலை நாள்கள், மேளா நாள்களில் மாணவ, மாணவிகளுக்கான பாஸ்போர்ட் சேவை மையத்தில், முன் தேதி பெறாமல் ‘வாக்இன்’ முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மண்டலத்தில் உள்ள நாகர்கோவில், திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய ஊர்களில் இருக்கும் தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்படும். வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் இசிஆர் வகை பாஸ்போர்ட் பெற்று செல்லுதல் மிகவும் நல்லது. பாதுகாப்பானதும்கூட. இந்த வழியில் பாஸ்போர்ட் எடுத்துச் செல்பவர்களுக்கு வெளிநாட்டில் பிரச்னை வந்தால் இந்திய அரசு உதவிட முன் வரும்” என அவர்கள் தெரிவித்தனர்.
SHARE