Monday, November 20, 2017

தந்தையின் நினைவாக ஆதிவாசி பெண்களுக்கு கல்வி!

SHARE

ஆதிவாசி பெண்களுக்கு உதவிபுரியும் குண்டுவெடிப்பில் உயிழந்தவரின் குடும்பம்!

டிக்கெட் பரிசோதகர் எஸ்.கே. ஷர்மா, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பலரில் ஒருவர். தனது மகனான ஆதித்யாவின் பிறந்தநாளை அவருடன் கொண்டாடுவதற்காக ஷர்மா 2008 நவம்பர் 26 அன்று அவரது வீட்டிற்குப் பரபரப்பாக சென்று கொண்டிருந்தார். அப்போது துரதிருஷ்டவசமாக,அவர் வெடிகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்தப் பயங்கரமான சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, ஷர்மா குடும்பம் சொந்த ஊரான குவாலியரில் அவரது நினைவாக, ஷஹீத் சுஷில் குமார் ஷர்மா என்ற அறக்கட்டளையை நிறுவியது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ஆதிவாசி பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுவதாகும். பலவீனமான சமூக-பொருளாதார பின்னணியில் உள்ள பெண்களுக்கு சுதந்திரமான கல்வியை வழங்குகிறது, சுய பாதுகாப்பு, ஓவியம் உள்ளிட்ட படிப்புகள் இந்த அறக்கட்டளையில் கற்றுத் தரப்படுகின்றன.

இதுகுறித்து தந்தையை இழந்த ஆதித்யா கூறியதாவது : அன்றையதினம் எனது அப்பாவுக்காகக் காத்திருந்து பிறகு தூங்கிவிட்டேன். ஆனால் என்ன நடந்தது என்று அப்போது எனக்குத் தெரியாது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்க்கும் போது எனது அம்மாவும், உறவினர்களும் அழுது கொண்டிருந்தனர். அப்போதுதான் எனது அப்பா இறந்துவிட்டது தெரியவந்தது.

அவர் இறந்தாலும் அவருடைய நினைவு உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினோம். அப்போதுதான் அவரது பேரில் ஒரு அறக்கட்டளை திறந்து அதன் மூலம் யாருக்காவது உதவ முடிவெடுக்கப்பட்டது.


அப்பா இறந்து ஒரு மாதத்திற்குப் பின்பு ஷஹீத் சுஷில் குமார் அறக்கட்டளையைக் குடும்பத்தினர் ஆதரவுடன் தொடங்கினோம், முதலில் மூன்று ஆதிவாசி பெண் குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 350க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் சுய பாதுகாப்பு குறித்து கல்வியளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துத் திறன்களையும் வளர்த்துக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது என்று ஆதித்யா கூறினார்.

ஆதித்யாவின் தாய் ராகினி ஷர்மா, பள்ளியில் இருந்து ஐந்து பெண் குழந்தைகளைத் தனிப்பட்ட முறையில் தத்தெடுத்து அவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கைக்காக உதவி வருகிறார். இந்தப் பெண்களின் உற்சாகமும் வாழ்க்கையின் அனுபவமே அவர்களைத் தத்தெடுக்க காரணமாக இருந்ததாக ராகினி கூறினார்.

சிறந்த கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத போதிலும் இந்த ஐந்து பெண்களும் 90 சதவிகிதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களை உற்சாகப் படுத்தினால் மேன்மேலும் வெற்றி பெறுவார்கள் என்று கருதினோம் என்று மகிழ்வுடன் ராகினி கூறினார்.

இந்தக் குடும்பம் சில வேதனை மற்றும் சவாலான நேரங்களை எதிர்கொண்டிருந்த போதிலும் ஆதிவாசி மற்றும் ஏழைப் பெண்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது. .
SHARE