Sunday, November 26, 2017

செல்ஃபி எடுக்க முயன்றவரைக் கொன்ற யானை!

SHARE

சாலையில் சென்ற யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை யானை மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு வங்காளத்தில் உள்ளது ஜல்பாய்க் கிரி மாவட்டம். இந்த மாவட்டம் அங்குள்ள சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று. தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்துசெல்வது வழக்கம். இந்தப் பகுதி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 25) இந்த வழியில் சாதிக் குமார் என்பவர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக யானை ஒன்று சென்றுள்ளது. அதைப் பார்த்ததும் அவர் காரை நிறுத்திவிட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அவரைக் கண்ட யானை மிகுந்த கோபத்துடன் அவரது செல்போனை உடைத்து, அவரையும் காலால் மிதித்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை அங்கிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுபோல் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரைச் சேர்ந்த அசோக் பாரதி (54) என்பவர் யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது யானை மிதித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. செல்ஃபியால் ஏற்படும் மரணங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
SHARE