Saturday, January 20, 2018

பனிப் புயலில் சிக்கி 10 பேர் பலி!

SHARE

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிரியாவிலிருந்து லெபனான் நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது பனிப் புயலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும், கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், சுமார் 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்தச் சண்டையின்போது ஏராளமான அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்படுகிறார்கள். இதுவரை இங்கு நடந்த உள்நாட்டுப் போரினால் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுவருவதால், இங்குள்ள பொதுமக்கள் பலர் உயிருக்குப் பயந்து அண்டை நாடான லெபனானுக்கு அகதிகளாகச் செல்கின்றனர்.

அவ்வகையில் சமீபத்தில் சிரியாவிலிருந்து ஒரு குழுவினர் புறப்பட்டு லெபனான் நோக்கிச் சென்றனர். அவர்கள் நேற்று (ஜனவரி 19) சிரியா-லெபனான் இடையே உள்ள பனிமலையைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, பனிப் புயலில் சிக்கிக்கொண்டனர்.

இந்தத் தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் லெபனான் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பனிப் புயலின்போது கடுங்குளிரைத் தாங்க முடியாமல் 2 குழந்தைகள், 6 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் 10 பேர் இறந்திருப்பதாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது.
SHARE