Monday, January 29, 2018

பத்மாவத்: மலேசியாவில் அனுமதி மறுப்பு!

SHARE

தீபிகா படுகோன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவத் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சினைகளையும், சிக்கல்களையும் சந்தித்த பத்மாவத் திரைப்படம் ஒருவழியாகப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை புரிந்துவருகிறது. படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

பத்மாவத் வெளியான மூன்றே நாட்களில் ரூ. 56 கோடி வசூலைக் குவித்தது. தற்போது 100 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது. இந்தப் படத்தை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளிலும் வெளியிடத் திட்டமிட்டுவருகின்றனர் படக் குழுவினர். அதன்படி, மலேசியாவில் படத்தை வெளியிட முற்பட்டனர். ஆனால் படத்தைப் பார்த்த மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் அங்கு பத்மாவத் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் மொஹமத் சம்பேரி அப்துல் ஆசிஸ், “மலேசியா நாட்டில் முஸ்லிம் மக்கள் அதிகமிருக்கின்றனர். இந்தப் படத்தின் கதையானது முஸ்லிம் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட்டால் அவர்களின் மனது புண்படும்” என்று மலேசியாவில் வெளியிட முடியாததற்கான காரணத்தை விளக்கியிருக்கிறார்.

இத்தகைய காரணங்களால் பத்மாவத் படத்தை மலேசியாவில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
SHARE