Monday, January 29, 2018

ஏழு வயது சிறுமியின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி!

SHARE

எம்.என்.அமானி ராயிதா என்ற ஏழு வயது சிறுமியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பதுளையில் அமைந்துள்ள அச்சிறுமியின் வீட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்குபற்றியதன் பின்னர் சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதியை அச்சிறுமி மகிழ்சியுடன் வரவேற்றார்.

ஜனாதிபதி, சிறுமி ராயிதா பாடிய பாடலொன்றைக் கேட்டு மகிழ்ந்ததுடன், அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர்களுடன் சேர்ந்து பாடலொன்றையும் பாடி மகிழ்ந்தார். இதையடுத்து ஜனாதிபதி, விடைபெற்றுச் செல்லும் வேளையில் கொழும்புக்கு வரும் சந்தர்ப்பத்தில் தன்னைப் பார்க்க வருமாறு அச்சிறுவர்களுக்கு அன்பான அழைப்பையும் விடுத்தார்.

அண்மையில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி ஜனாதிபதியை சந்திப்பதற்கு பதுளையிலிருந்து தனது பெற்றோருடன் கொழும்புக்கு வருகை தந்த ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதாவை, யாரும் எதிர்பாராத விதமாக ஜனாதிபதி அழைத்து பேசி மகிழ்ந்தார்.

இதன்போது, அச்சிறுமி தனது கைகளினால் வரைந்த சித்திரமொன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், பதுளைக்கு வரும் சந்தர்ப்பத்தில் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். இதற்கமையவே ஜனாதிபதி நேற்று அச்சிறுமியின் இல்லத்திற்கு சென்றார்.




SHARE