Thursday, March 22, 2018

ஐபிஎல் அட்டவணையில் மாற்றம்!

SHARE

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போட்டி கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 11ஆவது சீசன் தொடர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை விளையாட வேண்டும். ஒன்று உள்ளூர் மைதானத்திலும் மற்றொன்று எதிரணியின் மைதானத்திலும் நடத்தப்படும். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதன் உள்ளூர் போட்டிகளை இந்தூர் மற்றும் மொஹாலியில் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், பஞ்சாபின் சண்டிகர் விமான நிலையத்தில் மே 12ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், அந்த நாள்களில் மொஹாலியில் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மொஹாலியில் நடைபெறவிருந்த போட்டிகளை மட்டும் ஐபிஎல் நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது.

அதன்படி மொஹாலியில் ஏப்ரல் 8ஆம் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் அணியையும், ஏப்ரல் 15ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், ஏப்ரல் 19ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது. இந்தூரில் மே 4ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும், மே 6ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், மே 12ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும், மே 14ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது. அதேபோல் இரண்டாவது குவாளிஃபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் புனேவில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
SHARE