Thursday, March 22, 2018

காணாமல் போன மகன் திருநங்கையாகக் கண்டுபிடிப்பு!

SHARE

சென்னையில் காணாமல்போன ஒருவர் திருநங்கையாக மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கலைவாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மூத்த மகன் ராகுல் கடந்த ஜனவரி மாதம் திடீரென காணாமல் போய்விட்டதாகவும் காணாமல் போனது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் தனது மகனைக் கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஸ்குமார் அடங்கிய அமர்வு காணாமல்போன ராகுலைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் விழுப்புரத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், விழுப்புரம் விரைந்த போலீஸார் அங்கிருந்த திருநங்கை சுமித்ராவிடம் விசாரித்துள்ளனர். அப்போது, நான்தான் ராகுல் என்றும் திருநங்கையாக மாறியதால் குடும்பத்தை விட்டு வெளியேறியதாகவும் வேதனைத் தெரிவித்த சுமித்ரா, தன்னை இப்படியே விட்டுவிடும்படியும் கேட்டுள்ளார். அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறி அவரை அழைத்து வந்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, ராகுல் சுமித்ரா என்ற திருநங்கையாக மாறியிருந்ததைக் கண்ட தாய் கலைவாணி நீதிமன்றத்தில் அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் திருநங்கையாக மாறியவரிடம், “என் மகன் ராகுலாக வா” என்று கேட்டுள்ளார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாறியிருந்த ராகுல் தன்னால் அது முடியாது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகளைக்கண்ட நீதிபதிகள் திருநங்கையாக மாறிய ராகுலை அழைத்து, “பிச்சை எடுக்கக் கூடாது நன்றாகப் படிக்க வேண்டும். தவறான வழியில் செல்லக்கூடாது. தாயை அடிக்கடி சென்று சந்தித்து உதவ வேண்டும்” என அறிவுரை வழங்கினர். மேலும், ராகுலின் நிலைமையைக் கலைவாணிக்கு எடுத்துரைத்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்

அப்போது, திருநங்கையாக ராகுலை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், அதேசமயத்தில் மகனை விட்டுப் பிரிந்து செல்ல முடியாமல் கலைவாணியும், தன் நிலைமையை அம்மாவுக்குப் புரிய வைக்க முடியாமல் இருந்த ராகுலின் தவிப்பும் பார்ப்போரைக் கலங்க வைத்துள்ளது.
SHARE