Thursday, March 29, 2018

முகத்தை மாற்றும் அதர்வா!

SHARE
நடிப்பு என்பதைத் தாண்டி, கேரக்டருக்காக உடலை வருத்திக்கொள்ளும் நடிகர்களுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. அந்தப் பட்டியலில் சிவாஜி முதல் விக்ரம், சூர்யா ஆகியோர் இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் இருப்பவர்களின் அனுபவத்துக்குத் தொடர்பில்லாமல் தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வாவும் அப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். பரதேசி திரைப்படத்தில் தலையின் நடுவே சிகை இல்லாமல் நடித்தபோதே, இமேஜ் பார்க்காமல் நடிக்கும் நடிகர் என்று பெயர் பெற்றவர் தற்போது மூன்று கேரக்டர்களில் நடிக்கும் பூமாராங் படத்துக்காகப் பல்வேறு புது முயற்சிகளை எடுத்திருக்கிறார்.

அதர்வாவை இந்த முயற்சியில் ஈடுபடுத்தியது குறித்து அப்படத்தின் இயக்குநர் கண்ணனிடம் கேட்டபோது, "இந்தக் கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவானபோது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டன. எனவே மேக்கப் துறையில் விருது பெற்ற வல்லுனர்களான கலைஞர்கள் ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசாவை அணுகினோம். படத்திற்குத் தேவையான தோற்றங்களை இறுதிசெய்ய மும்பைக்குச் சென்றோம். அதர்வாவின் கடுமையான ஷூட்டிங்கினால் அவர்களை இங்கு வரவழைக்க வேண்டி இருந்தது. சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி 12 மணி நேரம் உழைத்து எங்களுக்குத் தேவையான தோற்றத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள். அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட அவருடைய உடலமைப்பைத் தனித்துவமான முறையில் அளவெடுத்துச் சென்றனர். ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசிவிடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் சிலைபோல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது” என்றார்.

எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், மனித உடல் என்ற ஒன்றுக்கான எல்லைகளை மாற்றிவிட முடியாது. இந்த சோதனை நாட்களின்போது அதர்வாவின் மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டபோது “ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது. அதன் பிறகுதான் தொடர் படப்பிடிப்புக்குச் செல்ல முடியும்” என்கிறார் கண்ணன். இந்தச் செயல்களின் நடுவே சில நேரங்களில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த மாதிரி விஷயங்களை முதன்முறையாக செய்வதால் மகிழ்ச்சி அடைகிறேன் என அதர்வா கூறியதாகச் சொல்கிறார் இயக்குநர் கண்ணன்.

பத்மாவத், நவாசுதீன் சித்திக் நடித்த மாம், அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் புகழ்பெற்றவர்கள் ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசா. ஆக்‌ஷன் திரில்லரான இந்த பூமராங் படத்தில் மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரசன்ன எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார். படத்தை இயக்குவதோடு மசாலா பிக்ஸ் பேனர் சார்பில் படத்தை தயாரிக்கிறார் ஆர் கண்ணன்.
SHARE