Monday, April 2, 2018

48 வருடங்கள் காத்திருந்த தென்னாப்பிரிக்கா!

SHARE

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் சற்றே வித்தியாசமானவை. கடந்த 1997ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய ஆறு டெஸ்ட் தொடர்களில் ஐந்து தொடர்களை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. ஒரு தொடர் சமனில் முடிந்தது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

பெரும்பாலும் உள்ளூர் மைதானங்களில் நடைபெறும் ஆட்டங்களில் அனைத்து அணிகளும் வெற்றி பெறுவது வழக்கம். ஆனால், இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியானது சற்றே வித்தியாசமாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால், இந்த முறை தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்று வரும் தொடரில் தென்னாப்பிரிக்க அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது, மொத்தம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்க அணிகள் மோதி வருகின்றன.

மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் தென்னாப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 30) தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 488 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் தொடர்ச்சியாகக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 110 ரன்களை மட்டுமே சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 53 ரன்களைச் சேர்த்தார். மற்ற வீரர்களில் ஷான் மார்ஷை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.



அணியின் கேப்டன் டிம் பெய்ன் (5) மற்றும் பேட் கம்மிஸ் (7) இருவரும் களத்தில் உள்ளனர். 378 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சைச் சமாளித்து போட்டியைச் சமன் செய்தாலும், தென்னாப்பிரிக்க அணி தொடரை 2-1 என கைப்பற்றிவிடும். இதனால் 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி மீண்டும் கோப்பையைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 48 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை தென்னாப்பிரிக்காவில் வீழ்த்த முடியாமல் போராடி வந்த தென்னாப்பிரிக்க அணி இந்த வெற்றியை நிச்சயம் கொண்டாடும்.
SHARE