Monday, April 2, 2018

மெஸ்சியால் தப்பிய பார்சிலோனா!

SHARE

லா லீகா தொடரில் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா செவில்லா அணியுடன் நடைபெற்ற போட்டி சமனில் முடிந்தது.

லா லீகா தொடர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டிக்கு முன்னர் வரை பார்சிலோனா அணி தோல்வியே சந்திக்காமல் விளையாடி வந்தது. அந்த வெற்றி தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் போட்டியைக் காண வந்திருந்தனர். ஆனால் போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. போட்டியில் மெஸ்சி விளையாடாமல் வெளியே அமர்ந்திருந்தார்.

போட்டி தொடக்கம் முதல் செவில்லா அணி வீரர்களே அதிரடியாக விளையாடி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல் பாதியிலேயே வரிசையாக கோல் அடிக்க பலமுறை முயற்சித்தனர். அதில் ஒருமுறை அடித்த கோல் ஆஃப்சைட் ஆனது. ஆனால் 36ஆவது நிமிடத்தில் ஃபிராங்கோ வாஸ்க்வெஸ் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். எனவே முதல் பாதியில் 1-0 என செவில்லா அணி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் பாதி தொடங்கியதும் மீண்டும் 50ஆவது நிமிடத்தில் செவில்லா அணி வீரர் லூயிஸ் முரைல் மற்றொரு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற செய்தார்.



போட்டியில் செவில்லா அணியின் ஆதிக்கம் தொடர்ச்சியாக இருந்து வந்த நிலையில் பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்சி களமிறங்கினார். அதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். அதன் பின்னர் தொடர்ச்சியாக பார்சிலோனா அணி சிறப்பாக விளையாடி வந்தது. இருப்பினும் கோல் அடிக்க முடியாமல் திணறி வந்த பார்சிலோனா அணிக்கு 88ஆவது நிமிடத்தில் முதல் கோல் வாய்ப்பு கிட்டியது. முதல் கோலினை லூயிஸ் சுரேஜ் அடித்து 1-2 என்ற நிலைக்கு பார்சிலோனா அணியை கொண்டு சென்றார். அதன் அடுத்த நிமிடமே பார்சிலோனா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மெஸ்சி மற்றொரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

இதனால் லா லீகாவின் இந்த சீசனில் பார்சிலோனா அணி 30 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
SHARE