Tuesday, May 22, 2018

யாழில் மின்னல் தாக்கத்தால் பற்றி எரிந்த தென்னை! (VIDEO)

SHARE

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்த நிலையில் யாழ். மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் யாழ். நகரில் கடும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் பாரிய வெளிச்சத்துடன் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று பற்றி எரிந்தது. இதனையடுத்து யாழ்.மாநகரசபைக்கு வழங்கிய தகவலை அடுத்து தீயணைப்பு பிரிவுடன் சிலர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும் இந்த மின்னல் தாக்கத்தில் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிமின்னல் தாக்கத்தால் இடி விழுந்த வீட்டில் வசித்த வந்த குடும்பம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய போதும் வீட்டின் பிரதான மின் இணைப்பு ஆளி வெடித்துச் சிதறியுள்ளது.

இதனால் வீட்டின் பல பகுதிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரமும் பழுதடைந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான குடும்பப் பெண்மணி கருத்துத் தெரிவிக்கையில்,

கணவர் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் நானும் எனது சிறுவயதுப் பிள்ளையும், அம்மாவும் வீட்டுக்குள் இருந்துள்ளோம். திடீரென பெரும் சத்தத்துடன் வீட்டுக்குள்ளிருந்த பிரதான மின் இணைப்பு ஆளி வெடித்துச் சிதறியது.

இதனால் நாம் பயத்துடன் வீட்டுக்குள்ளேயே நின்றோம். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது தென்னை மரம் கொழுந்துவிட்டு எரிவதை அவதானித்தோம் என்றார்.


SHARE