Sunday, June 24, 2018

கோயில் திருவிழாவில் தீ: 20 பேர் படுகாயம் - மட்டக்களப்பில் சம்பவம்!

SHARE

மட்டக்களப்பு, உன்னிச்சை பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 20 பேரும் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




சம்பவம் தொடர்பாக மேலும் குறிப்பிடப்படுவதாவது,

உன்னிச்சை மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் அம்மன் வீதி உலா நேற்று இடம்பெற்றது. இதன்போது அம்மன் தேருக்கு முன்னால் பக்தர் ஒருவரால் சுழற்றப்பட்ட தீப்பந்தில் இருந்த நெருப்பு பக்தர்கள் மேல் வீழ்ந்து தீப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து ஏனைய பக்தர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததுடன்  தீயினால் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 20 பேரையும் உடனடியாக கரடியனாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.




சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
SHARE