Saturday, June 16, 2018

கேரளாவில் கனமழை: 7 பேர் பலி!

SHARE

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச் சரிவில் மூன்று குழந்தைகள் உள்பட ஏழு பேர் பலியாகினர்.

இந்தாண்டு, கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே ஆரம்பித்தது. கடந்த 10 நாட்களாக மழை தீவிரமாகப் பெய்துவருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம், வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கேரளாவில் ஜூன் 1 முதல் ஜூன் 14 வரை பெய்த மழையின் அளவு 52 சதவிகிதமாகும்.

கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி அருகே கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டிப்பரா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் மூன்று குழந்தைகள் உள்பட ஏழு பேர் பலியாகினர். மேலும் 10 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மீட்புப் பணிகளை விரைந்து செய்யுமாறு அமைச்சர்கள், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்கள், போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினருக்கு அறிவுறுத்தினார். கனமழை காரணமாக கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு 14 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 380 குடும்பங்களைச் சேர்ந்த 1,030 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
SHARE