Saturday, June 16, 2018

செப்டம்பரில் மோதும் சிவகார்த்தி - தனுஷ் படங்கள்!

SHARE

சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீம ராஜா, தனுஷ் நடித்துள்ள வடசென்னை ஆகிய இரு படங்களின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானாலும் தனுஷ் நடித்த ‘3’ திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக அமைய வெகு விரைவிலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவிட்டார். எதிர் நீச்சல் படத்தை தனுஷ் தயாரிக்கவும் செய்தார். ஆனால் அதன் பின் இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. இருவருக்கும் மனக்கசப்பு நிலவுவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டன. ஆனால் அதன் பின் பல மேடைகளை இருவரும் கலந்து கொண்டு அந்தப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். தற்போது இருவரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கவுள்ளனர்.

தனுஷின் ஆஸ்தான இயக்குநராக வலம்வருபவர் வெற்றிமாறன். இருவரும் திரைத் துறையைக் கடந்து நட்புடன் பழகுபவர்கள். தனுஷ் நடித்த பொல்லாதவன் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து அவரை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கி உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டார். வட சென்னை படத்தை தனுஷை கதாநாயகனாக வைத்து தொடங்க ஆயத்தமாக, கால்ஷீட் பிரச்சினை காரணமாக தனுஷால் உடனடியாக படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் தனது தயாரிப்பில் வெற்றிமாறனை இன்னொரு படம் இயக்கச் சொல்ல, விசாரணை படம் உருவானது. அதைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி வட சென்னையில் கவனம் செலுத்த, படத்தின் வெளியீடு எப்போது என தொடர்ந்து கேட்கப்பட்டது. அதற்கான பதிலை தனுஷே தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூலை 22இல் ட்ரெய்லரும் செப்டம்பர் மாதம் படமும் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கும் அதே கதைதான். அவர் நடிப்பில் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகியுள்ள படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். பொன்ராமுக்கு இயக்குநராக இது மூன்றாவது படம். இந்த மூன்று படங்களின் நாயகனும் சிவகார்த்திகேயன்தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என வெற்றிப் படங்களைக் கொடுத்த இந்தக் கூட்டணி ஹாட்ரிக் ஹிட் கொடுக்கத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதன் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் செப்டம்பர் 13ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆஸ்தான இயக்குநர்களின் துணையுடன் இரு நடிகர்களும் செப்டம்பர் மாதம் நாள் குறித்துள்ளனர். வசூலில் எந்தப் படம் முந்துகிறது என்பதை எல்லாம் விடுத்து இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் செப்டம்பர் மாதம் கொண்டாட்ட மாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
SHARE