Friday, June 15, 2018

இராணுவப் பாணியில் முல்லையில் நுண்கடனுக்கு எதிராக போராடிய மக்களை படம் எடுத்த நுண்நிதி கம்பனி!

SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் நுண்கடன் நிதி நிறுவனங்களினால் ஏற்படுத்தப்படும் சமூக அவலங்களுக்கு எதிரான விழிப்புணர்வின் போது  இராணுவப் பாணியில் பிரபல நுண்நிதி நிறுவனம் ஒன்று மக்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்துள்ளது.  நுண்நிதி கடன்களால் சமூக அவலத்தை தடுக்கவும் பெண்களை பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும்வகையில் இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதுபோன்றே முல்லைத்தீவிலும்  போருக்குபின்னர் குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனையான  நுண்நிதிக்கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும்   அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்டப் பேரிணியை முன்னெடுத்தனர்.


இதன்போது முல்லை நகரத்தில்உள்ள பிரபல நுண்கடன் நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் உட்பட உத்தியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை புகைப்படம் பிடிப்பதைப்போன்று நடந்துகொண்டுள்ளனர்.
இனிவரும் நாட்களில் இந்த புகைப்படங்களை வைத்து குறித்த நிறுவனத்தில் தாம் பெற்ற கடன்களை திருப்ப செலுத்தும்போது அந்த நிறுவன ஊழியர்களால் அழுத்தங்களுக்கு உட்படுத்த படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர்  தெரிவித்தனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர்பகுதியில் 8க்கு  மேற்பட்ட நுண்நிதி கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.இதனால்  நாள்தோறும் பல பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள்.

குறிப்பாக இவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களிடம் சென்று குழுக்களாக சேர்த்து ஆசை வார்தை காட்டி கடன்களை வழங்கிவருவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இந்த நிறுவனங்களின்  முகவர்களாக செயற்படும் கடன் அறவிடும் ஊழியர்கள் பலர் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதையும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
SHARE