Tuesday, June 5, 2018

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்பு வழக்கு யாழ். நீதிமன்றால் தள்ளுபடி!

SHARE

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்பை வழங்கி வருவதாக யூஎஸ் கேபிள் சேவிஸ் நிறுவனத்துக்கு எதிராக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் பொலிஸார் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்பை வழங்கி வருவதாக யூஎஸ் கேபிள் சேவிஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை கடந்த மே 24ஆம் திகதி தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளும் பொலிஸாரும் சோதனையிட்டனர்.

அந்த அலுவலகத்தில் மீட்கப்பட்டதாகத் தெரிவித்து கேபிள் ரீவி இணைப்பு வயர்கள் பந்துகளை பொலிஸார் மறுநாள் நீதிமன்றில் முன்வைத்தனர். அத்துடன், கேபிள் ரீவி இணைப்பை வழங்குவதற்கான உபகரணங்கள் அலுவலத்திலிருந்து மீட்கப்பட்டன என்ற குற்றச்சாட்டில் யூஎஸ் கேபிள் சேவிஸ் நிறுவனத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
“எமது கட்சிக்காரருக்கு கேபிள் ரீவி சேவை உரிமம் கிடைத்துவிடும் என்ற தொழில் போட்டி காரணமாக டான் ரீவி நிறுவனத்தினர் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கின்றனர்.

இவ்வாறு நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் போது, எமது கட்சிக் காரருக்கு வழங்கப்படவுள்ள உரிமத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியை அமைச்சராக கொண்ட அமைச்சின் கீழ் செய்மதி ஊடான தொலைக்காட்சி அலைவரிசையை வழங்குவதற்கு 5 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் உள்ளது. சுமார் 5 மில்லியன் ரூபா நிதியைச் செலுத்தி அந்த உரிமம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

செய்மதி உரிமம் வழங்கப்பட்டதன் பின்னராக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் செய்மதி ஊடான சேவை வழங்கும் உபகரணங்களை வாங்க – வைத்திருக்க – விற்பனை செய்யவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட உரிமத்தின் பிரகாரம் உபகரணங்களை வைத்திருப்பதற்கான உரிமையை யூஎஸ் நிறுவனத்தினர் வரும் 24ஆம் திகதிவரை கொண்டுள்ளனர்” என்று அந்த நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தனர்.

அதனடிப்படையில் வழக்கு மீதான கட்டளை இன்று 5ஆம் திகதி வழங்குவது என மன்று உத்தரவிட்டிருந்தது.

கட்டளைக்காக வழக்கு இன்று மன்றில் எடுக்கப்பட்டது. யூஎஸ் கேபிள் சேவிஸ் நிறுவனத்தின் சார்பில் மூத்த சட்டத்தரணிகளான வி.ரி.சிவலிங்கம், மு.றெமிடியஸ், அன்ரன் புனிதநாயகம் மற்றும் சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுகன்யா கணேசலிங்கம், சிவலிங்கம் றிஷிகேஷன் ஆகியோர் முன்னிலையாகினர்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சார்பில் சட்டவாதி ஒருவர் மன்றில் முன்னிலையானார்.

“குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யூஎஸ் கேபிள் சேவிஸ் நிறுவனத்துக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள உரிமம் வரும் ஜூன் 24ஆம் திகதிவரை நடைமுறையிலிருக்கின்றது. அதனடிப்படையில் அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் மீட்கப்பட்ட உபகரணங்களை அவர்கள் வைத்திருப்பதற்கான சட்டரீதியான உரித்து யூஎஸ் கேபிள் சேவிஸ் நிறுவனத்துக்கு உண்டு என்ற முடிவுக்கு மன்று வருகிறது. அதனால் அந்த நிறுவனத்து எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மன்றினால் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிவான் சி.சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.
SHARE