Friday, June 15, 2018

“விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல” – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு!

SHARE

விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்துள்ள சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக தெரிவித்து குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிஸர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றில் இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.




விடுதலைப் புலி உறுப்பினர்களான யோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் ஆகிய நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்பு வழங்கியது.

ஏனைய மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான குலம், அப்துல்லா, மாம்பழம் ஆகியோர் வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காக தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.




அரச தரப்பு சட்டத்தரணி நோத்தோ இலங்கையிலும், சுவிஸிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகளை நீதிமன்றம் நிராகரித்தது. சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்தது.
SHARE