Sunday, June 3, 2018

வவுனியா கூமாங்குளத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்!

SHARE

வவுனியா, கூமாங்குளம் பகுதில் இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 32 வயதுடைய இளைஞன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிற்கு வாகனத்தில் வருகை தந்த 15க்கும் மேற்பட்ட இனந்தெரியாத சந்தேகநபர்கள், வீட்டு வளாகத்தில் நின்ற இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலை தீயிட்டுள்ளனர். பின்னர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது வீட்டின் ஜன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மாத குழந்தையை தாயார் அணைத்து பிடித்திருந்தமையினால் குழந்தைக்கு எதுவித பாதிப்புமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





SHARE