Tuesday, July 17, 2018

சீதக்காதி: உருவான விதம்!

SHARE

சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘அய்யா’ என்ற கதாபாத்திரத்தின் தோற்றத்தை உருவாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நடிப்பிற்காக அதிகம் பேசப்படும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார் விஜய் சேதுபதி. எந்த கதாபாத்திரத்தையும் யாருடைய பாதிப்பும் இல்லாமல் தனது இயல்பான நடிப்பால் மெருகேற்றுகிறார். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய ஒன்றிரண்டு படங்களுக்குப் பின் உடனடியாக சற்று வயதான கதாபாத்திரத்தை சூது கவ்வும் படத்தில் எடுத்தார். உருவ மாற்றம் அல்லாமல் நடிப்பில் வித்தியாசம் காட்டிவந்த விஜய் சேதுபதி முழுக்க வயதான பாத்திரமாகவே மாறி நடித்துள்ள படம் சீதக்காதி. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் இவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பின் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

அவ்வை சண்முகி, இந்தியன், தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் கமல், ஐ படத்தில் விக்ரம், தற்போது பூமராங் படத்திற்காக அதர்வா ஆகியோர் முழுக்க தங்களது உருவத்தை மாற்றி நடித்துள்ளனர். அந்த வரிசையில் சீதக்காதி படத்தின் மூலம் விஜய் சேதுபதியும் அதில் இணைந்துள்ளார். ஹாலிவுட் கலைஞர்கள் விஜய் சேதுபதியை எண்பது வயது முதியவராக மாற்றிக்காட்டியுள்ளனர். ஏற்கனவே வெளியான போஸ்டரில் ‘இதுவா விஜய் சேதுபதி’ என ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய படக்குழு தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோவில் அது எப்படி சாத்தியமானது என்பதைக் காட்டியுள்ளது.

இயக்குநர் பாலாஜி தரணிதரனும் விஜய் சேதுபதியும் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கதாபாத்திரத்தின் தோற்றம் எப்படி அமையவேண்டும் என்பதை அறியச் சென்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவைத் தொகுத்து தற்போது வெளியிட்டுள்ளனர்.

பார்வையிலும், முக பாவனைகளிலும் வித்தியாசங்களைக் காட்டும் விஜய் சேதுபதி உருவத்தில் முழுக்க இன்னொருவராய் மாறியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விஜய் சேதுபதியின் 25ஆவது படம் ஆகும்.

SHARE