Wednesday, July 18, 2018

சொந்த காணிகளுக்குள் கால் பதித்த முள்ளிக்குளம் மக்கள்!

SHARE

மக்கள் போராட்டத்தின் வலிமையால் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் காணிகளுக்குள் மக்கள் இன்று (புதன்கிழமை) கால் பதித்துள்ளனர்.

ஓராண்டுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட இக்காணிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை முன்னெடுக்காத நிலையில், தாமாகவே சொந்த காணிகளுக்குள் கால் பதித்துள்ளனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடற்படையினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.




இந்நிலையில் முள்ளிக்குளம் மக்கள் பல வருடங்களாக முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு கடற்படையினரை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி முதல் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் காணிகள் உரிய காலத்தில் விடுவிக்கப்படும் என்ற கடற்படை அதிகாரிகளின் உறுதிமொழியை தொடர்ந்து 38 நாட்களாக இடம்பெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி முள்ளிக்குளம் மக்களின் நூறு ஏக்கர் காணியை விடுவிப்பதாக கடற்கடையினர் அறிவித்தனர்.




எனினும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் மாத்திரமே மக்கள் அனுமதிக்கப்பட நிலையில், ஏனைய காணிகள் அளவீடு செய்யப்பட்டு பின்னர் மக்கள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில், முள்ளிக்குளம் மக்கள் ஒன்றிணைந்து இன்று தமது காணிகளுக்குள் கால் பதித்து, தற்காலிக கூடாரங்களை அமைத்து காணிகளை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மக்களுக்கு ஆதரவாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரன்ஸ் லியோ தலைமையில் அருட்தந்தையர்களும் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.












SHARE