Friday, July 13, 2018

சூரிய மின் கலத்தினால் மக்கள் பாதிப்பு!

SHARE

வவுனியா, காத்தார் சின்னகுளம் பகுதியில்  80 ஏக்கர் நிலப்பகுதியில்  சூரிய மின்கலம் (சோளர்) நாட்டப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் வாழும் மக்கள் அதன் கதிர்வீச்சு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சூரிய மின்கலம் (சோளர்) ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்னினைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,




நாங்கள் இப்பகுதியில்  20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவருகின்றோம் . இந்நிலையில் குறித்த  சூரிய மின்கலம் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது.

இந்த சூரிய மின் உற்பத்தி செயற்பாட்டினால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதுடன், வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் எமது இருப்பிடங்களில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் பல விதமான நோய்களுக்கு உள்ளாகி வருகின்றோம். இங்கு பிறக்கும் சில பிள்ளைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. இதற்கு காரணம் இந்த மின் உற்பத்தி செயற்பாடென முழுமையாக நம்புகின்றோம்.

அத்துடன் குறித்த மின் உற்பத்தியினால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகின்றது.  ஆகையால் இப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் நீர் வற்றிகாணப்படுவதுடன் மழை வீழ்ச்சியின் அளவும் குறைந்து செல்கிறது.




மேலும் மழை பெய்யும் நிலைமைகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் ஒருவித புகை அடித்து கரு முகில் கூட்டங்களை கலைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையம் அமைப்பதற்கு முன்னர் இவ்வாறான பிரச்சனைகளை ஏதும் ஏற்படவில்லை.

அத்துடன் குறித்த  கிராமத்திற்கு தொலைவில் மக்கள் வசிக்காத காட்டுப்பகுதிகள் இருக்கின்றன.அங்கு இதனை அமைக்காமல் மக்களின் குடியிருப்பு பகுதியில் அமைத்துள்ளனர்.

எனவே எமது நிலைமைகளை கருத்திற்கொண்டு உரிய தீர்வினை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SHARE