Sunday, July 8, 2018

கோலமாவு முதல் துப்பாக்கி வரை

SHARE

நயன்தாரா பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள்  (ஜூலை 5) வெளியாகியுள்ளன.

கோலமாவுக்கும் போதைப் பொருளுக்குமான குழப்பத்தில் ஒரு குடும்பமே சிக்கி, பின் மீள்வதை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம். கோகிலாவான நயன்தாராவிற்கு அம்மா சரண்யா பொன்வண்ணன், தங்கை ஜேக்குலின். ஒரு தலையாக அவரைக் காதலிக்கிறார் யோகி பாபு. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பலிடம் எதிர்பாராதவிதமாகக் குடும்பத்துடன் சிக்கிக்கொள்கின்றனர். அதிலிருந்து மீள அப்பாவி பெண்ணாக வரும் நயன்தாரா துப்பாக்கியைத் தூக்குகிறார். சீரியஸான ஒன்லைனை காமெடியாக மாற்றி திரைக்கதை அமைத்துள்ளதை ட்ரெய்லரைப் பார்க்கும்போது உணரமுடிகிறது.




யோகி பாபு, சரண்யாவுக்கு ஏற்கெனவே பரிச்சயமான கதாபாத்திரங்கள் என்றாலும் வழக்கம்போல் சிரிக்க வைக்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வலம்வந்த ஜேக்குலினுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் சரியாக செய்துள்ளதை ட்ரெய்லரின் இறுதியில் அவர் பேசும் வசனமும், நடிப்பும் காட்டுகிறது.

அனிருத் இசையில் எதுவரையோ, கல்யாண வயசு, ஒரே ஒரு, கபிஸ்கபா கோகோ, திட்டம் போட தெரியல, கன் - இன் காதல் என ஆறு பாடல்கள் வெளியாகியுள்ளன.




அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நிர்மல் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.


SHARE