ஆர்யா நடிப்பில் கஜினிகாந்த் திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகிவரும் நிலையில் ஆர்யா மீண்டும் இயக்குநர் சந்தோஷுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.
ஆர்யா, சாயிஷா முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் கஜினிகாந்த். 1988ஆம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி வேட்டி கட்ட மறந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் காட்சி பிரபலமானது. இந்த காட்சியை நினைவுபடுத்தும் விதமாக சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே இந்தப் படத்தில் நினைவுத் திறன் குறைபாடுள்ளவராக ஆர்யா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. கஜினி படத்தில் சூர்யாவும் அத்தகைய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கஜினிகாந்த் என்ற டைட்டிலில் தயாராகுவதால் இந்த படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் அப்படியானது தான் என அடித்துக்கூறுகின்றனர்.
கஜினிகாந்த் ஜூலை 27ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதே நாள் விஜய் சேதுபதி நடிப்பில் ஜுங்கா, த்ரிஷா நடிப்பில் மோகினி ஆகிய படங்கள் வெளியாவதால் படம் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
படம் வெளியாகும் அதே நேரம் ஆர்யா, இயக்குநர் சந்தோஷ் இருவரும் தங்களது அடுத்த படத்தைத் தொடங்க உள்ளனர். சந்தோஷ் இதற்கு முன் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கினார். இரு படங்களும் விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூலில் வரவேற்பு பெற்றன.
ஆர்யா - சந்தோஷ் இணையும் புதிய படம் முதிர்ந்த காதலைப் பேசுவதாக உருவாக உள்ளது. கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாக உள்ளன.