Monday, July 16, 2018

நடனப் புயலுடன் மீண்டும் கூட்டணி!

SHARE

பிரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா முதன்முறையாக நடித்த திரைப்படம் தேவி. தமன்னா கதாநாயகியாக நடித்த அந்த திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. தமன்னாவின் நடனமும் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘லக்‌ஷ்மி’.




இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் பாடல்களில் சிறுமி தித்யா பான்டேவின் நடனம் கவனம் பெற்றது. விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் பிரபு தேவாவும் ஏ.எல்.விஜய்யும் மீண்டும் இனைந்து பணியாற்றவுள்ளனர்.

சமீபகாலமாக வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாவது தமிழ்த் திரையுலகில் அதிகரித்துள்ளது. தற்போது தயாரிப்பில் உள்ள இரண்டாம் பாகங்களின் எண்ணிக்கையே அரை டஜனை கடந்துள்ளது. அந்த பட்டியலில் தேவி படமும் இணையவுள்ளது. பிரபுதேவாவும் விஜய்யும் இணைந்து பணியாற்ற உள்ள புதிய படம் தேவி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். ஆனால் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த தமன்னா நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை.

பிரபுதேவா தற்போது ஏ.ஜி.முகில் இயக்கும் புதிய படத்தில் நிவேதா பெத்து ராஜுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.
SHARE