Wednesday, July 25, 2018

செயற்கைக்கோளைச் செலுத்தும் ஃபேஸ்புக்!

SHARE

உலகம் முழுக்க இணையச் சேவையை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தனி செயற்கைக்கோள் ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் பல வலைதளங்கள் இயங்கிவந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் வகிப்பது ஃபேஸ்புக் மட்டுமே. அந்த அளவுக்கு அதன் பயன்பாடு மக்களைச் சென்றடைந்துள்ளது. 2004ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் சக்கர்பெர்க் என்பவர் அறிமுகம் செய்த இந்த ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்தச் சர்ச்சையிலிருந்து மீண்டு, தங்களின் சேவையைத் துரிதப்படுத்தும் முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் இறங்கியுள்ளது.




இதன் ஒரு பகுதியாக தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் 'அதேனா' என்னும் செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை அடுத்த ஆண்டு செலுத்த திட்டமிட்டு வருவதாகக் கூறியுள்ளது. இதற்கான முழுத் திட்டத்தையும் ஃபேஸ்புக் நிறுவனம், யுனைடெட் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷனில் தாக்கல் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் உலகில் உள்ள பாதுகாப்பான மற்றும் இணைய வசதியில்லா பகுதிகளுக்கு எளிமையாகப் பிராட்பேண்ட் இணையச் சேவையை வழங்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், "இந்தத் திட்டம் பற்றிய முழுமையான கருத்தைத் தற்போது தெரிவிக்க முடியாது. செயற்கைக்கோள் மூலம் உருவாக்கப்படும் பிராட்பேண்ட் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு முக்கியப் பயனாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இணைய வசதி குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் முற்றிலும் இணைய வசதி இல்லாத இடங்களில் இதன் மூலம் எளிதாகப் பிராட்பேண்ட் கொண்டு வர முடியும்’’ என்று கூறினார்.
SHARE