Sunday, July 8, 2018

பின்வாங்கிய சர்கார் டீம்!

SHARE

சர்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளை அகற்றக் கோரி நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 21ஆம் தேதி விஜய்யின் 62ஆவது படமான சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில், விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. பல்வேறு அமைப்பினர், கட்சியினர் அதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். சர்கார் படத்தில் உள்ள புகைபிடிக்கும் காட்சிகளை அகற்றக் கோரி விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளருக்கு பொதுசுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




தமிழகப் பொதுசுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை விளம்பரம், யூ டியூப் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்குத் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், புகைபிடிப்பது போன்ற புகைப்படம் உள்ள போஸ்டரைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளது.
SHARE