Wednesday, July 18, 2018

யாழ். கோட்டைக்குள் மனித எலும்புக்கூடு!

SHARE

போர்த்துக்கேயர் காலத்திற்கு உட்பட்டது என நம்பப்படும் மனித எலும்புக்கூடொன்று யாழ். கோட்டைப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். கோட்டை உட்பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போதே குறித்த மனித எச்சம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, குறித்த பகுதியில் போர்த்துக்கீசர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று படிமங்கள் காணப்படுவது கண்றியப்பட்டுள்ள நிலையில், குறித்த எலும்புக்கூடும் போர்த்துக்கேயர் காலத்திற்குட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இது தொடர்பாக தொல்லியல் திணைக்கள அதிகாரியொருவரை வினவியபோது, ”யாழ். கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதற்கான சில ஆதராங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது அமெரிக்க பல்கலைகழகம், யாழ். பல்கலைகழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாசார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாக இங்கு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம், கோட்டையின் உட்புறமான மத்திய பகுதியில் முன்னதாக போர்த்துகீசர் காலத்து தேவாலயம் ஒன்று இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.




இந்நிலையிலேயே நேற்றைய அகழ்வு பணிகளின் போது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது போத்துக்கீசர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் மனித எச்சம் என நம்பப்படுகிறது.

ஏனெனில், போர்த்துக்கேயர் காலத்தில் மேற்கு நோக்கியவாறே இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படுவர். அதன் பின்னரான காலப்பகுதியிலே இறந்தவர்களை கிழக்கு திசை நோக்கி அடக்கம் செய்யும் பழக்கம் உருவானது. ஆகவே அவை போர்த்துக்கேயர் காலத்திற்கு உரியவையாக இருக்கலாம் என நம்புகின்றோம்.

ஆய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் எதனையும் உறுதியாகக் கூற முடியாது” எனக் குறிப்பிட்டார்.
SHARE