Saturday, July 14, 2018

வவுனியாவில் காட்டுத்தீ: பல ஏக்கர் நிலப்பரப்பு நாசம்!

SHARE

வவுனியா, இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இன்று (சனிக்கிழமை) திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது.

இரட்டைப்பெரியகுளம், குருந்துபிட்டி குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதியே இவ்வாறு திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது.

மதியம் 1 மணியளவில் குறித்த பிரதேசத்தில் தீப் பிடித்ததுடன் காற்றின் வேகம் அதிகரித்த காரணத்தால் அனைத்து இடங்களிற்கும் தீ பரவியதுடன் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளித்தது.




இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இரட்டைபெரியகுளம் பொலிஸார் தீயை அணைக்க முற்பட்டதுடன், வவுனியா நகரசபை தீ அணைப்பு பிரிவிற்கும் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததனால் குடியிருப்புப் பகுதிக்குள் தீ பரவ இருந்தமை தடுக்கப்பட்டது.

எனினும் குறித்த தீ காரணமாக  7 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




சம்பவ இடத்திற்கு வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், உப.நகரபிதா வே.குமாரசாமி ஆகியோர் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தனர்.

மேலும் குறித்த தீ பரவலுக்கான காரணம் தொடர்பாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



SHARE