Monday, July 16, 2018

கடைக்குட்டி சிங்கம் - திரை விமர்சனம்!

SHARE

நாம் இழந்துகொண்டிருக்கும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் ஊடாக விவசாயத்தின் அருமையைப் பேச முயற்சி செய்திருக்கிறது கடைக்குட்டி சிங்கம்.

பெருநாழி ரணசிங்கத்தின் (சத்யராஜ்) குடும்பம் ரொம்பப் பெருசு. ஐந்து பெண்களுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி பெருநாழி குணசிங்கம் (கார்த்தி). பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுத்தாலும் ஆங்காங்கே இருந்தாலும் எல்லோரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்துவருகிறார்கள்.

ஊரில் கொடியரசு (சந்துரு), அவனது தம்பி கொடிமாறன் (சவுந்தரராஜன்) ஆகியோருக்கும் குணசிங்கத்துக்கும் சின்ன வயதிலிருந்தே பகைமை. குணசிங்கம் தன் அக்கா மகள்கள், பூம்பொழில் செல்லம்மா, (பிரியா பவானி சங்கர்) ஆண்டாள் ப்ரியதர்ஷினி (அர்த்தனா பினு) இருவரையும் விரும்பாமல் கொடிரசனின் அக்கா மகள் கண்ணுக்கினியாளை (சாயிஷா) விரும்புகிறான்.

கொடியரசன் சாதிப் பெருமை பேசிக்கொண்டு அரசியல் செய்துவருகிறான். இதனால் ஒரு ஆணவக் கொலை அரங்கேறுகிறது. அந்தக் கொலையை குணசிங்கம் அம்பலப்படுத்துவதால் மேலும் பகை அதிகமாகிறது. குணசிங்கம் பகை வென்று, குடும்பத்தைக் காத்து, காதலியை எப்படிக் கைப்பிடிக்கிறான் என்பதுதான் கதை.
அதிகப்படியான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மனதில் நிற்கும்படி பதிய வைத்த இயக்குநர் பாண்டியராஜ் பாரட்டுக்குரியவர். நாம் மறந்து போன விஷயங்களை நினைவுபடுத்தி நம் மண்ணின் அடையாளத்தை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறார் இயக்குநர். விவசாயத்தின் பெருமை, கூட்டுக் குடும்பத்தின் சிறப்பு, சாதி ஒழிப்பு ஆகியவற்றை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார்.

வீட்டிற்கு வருபவர்களுக்கும், திருமணத்திற்கு வருபவர்களுக்கும் மரக் கன்றுகள் கொடுப்பது, மண்ணால் செய்யப்பட்ட டம்ளரில் செம்பருத்தி டீ தருவது என இயற்கையின் சூழலோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது படம். விவசாயம் பற்றிப் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் கைத்தட்டல்கள். சாதி ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்று பேசுபவர்கள்தான் சாதியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அரசை விமர்சித்தும் தைரியமாகப் பேசியிருக்கிறார் பாண்டியராஜ். சூரியின் நகைச்சுவை சில இடங்களிலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

இயக்குநரின் நல்ல நோக்கங்களைப் பாராட்டும் அதே வேளையில், படத்தில் பிரச்சார நெடி அதிகம் என்பதையும் சொல்ல வேண்டும். விவசாயம் பற்றிப் பேசும் படத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே விவசாயியாக கார்த்தி நிலத்தில் நிற்கிறார். படம் முழுவதுமே நிலம் என்பது பின்னணியாகத்தான் இருக்கிறதே தவிர, படத்தின் அங்கமாக மாறவில்லை. மண் சார்ந்த வாழ்க்கையின் அடையாளங்கள் படம் முழுவதும் வருகின்றன. ஆனால், கதையோடு அவை இரண்டறக் கலக்கவில்லை. விவசாயிகளின் தற்கொலைகள் பற்றிப் படம் மேலோட்டமாகப் பேசுகிறது. அதன் பாதிப்பைப் பார்வையாளருக்குக் கடத்த முயற்சி செய்திருக்கலாம்.
விவசாயம், குடும்பம் என இரு அம்சங்களை எடுத்துக்கொண்ட இயக்குநர் இரண்டையும் இணைத்துக் கொண்டுபோகாமல் இரு பாதைகளிலும் மாறி மாறிப் பயணிக்கிறார்.

அக்கா கணவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பது, அவர்களுக்குத் தம்பி எல்லாமுமாக இருந்து பார்த்துக்கொள்வது, கடைசியில் அவர்கள் திருந்துவது என்பதெல்லாம் காலங்காலமாகத் தமிழ் சினிமாவில் பார்த்துச் சலித்தவைதான். என்றாலும், தனது கதை சொல்லும் திறன் மூலம் இந்தக் கதையை இன்றைய சூழலுக்கு ஏற்றபடி அமைத்துச் சலிப்பு ஏற்படாத விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார் பாண்டியராஜ்.

விவசாயியாக வரும் கார்த்தி, தான் போட்டிருக்கும் உள்பனியன் முதற்கொண்டு எந்நேரமும் புது உடைகளுடன் இருப்பது உறுத்துகிறது. சாயிஷா ஒரு காட்சியில் பறை அடிக்கிறார். ஆனால், அந்தக் காட்சிக்கான நம்பகத்தன்மை உருப்பெறவே இல்லை. அதற்காக மேலும் மெனக்கெட்டிருக்கலாம்.

இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும் படத்தில் ஒரு சிலரின் மிகை நடிப்பு நெருடலாக உள்ளது. வில்லன் உறுத்தலாகவே இருக்கிறார். சாயிஷாவின் கறுப்பு மேக்கப் ஒரு சில இடங்களில் சாயம் வெளுத்துவிடுகிறது.
சத்யராஜ், கார்த்தி, சாயிஷா, சூரி, பானுபிரியா, விஜி சந்திரசேகர், பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, பொன்வண்ணன், ஸ்ரீமன், சந்துரு, இளவரசு, சரவணன், மனோஜ்குமார், மனோபாலா, மாரிமுத்து, ஜான் விஜய், மௌனிகா, யுவராணி, தீபா, இந்துமதி மணிகண்டன், ஜீவிதா கிருஷ்ணன், ரிந்து ரவி, சவுந்தரராஜன், ‘பசங்க’ பாண்டி என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். தங்களுக்கான இடத்தில் ஒவ்வொருவரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

யுகபாரதியின் பாடல் வரிகளோடு டி.இமானின் இசையில் பாடல்கள் எங்கோ கேட்டதுபோல் இருந்தாலும் புதுமையாக இருக்கின்றன. வேல்ராஜ் ஒளிப்பதிவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கதைக்கு என்ன தேவையோ அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இத்தனை கதாபாத்திரங்கள் கொண்ட கதையைக் குழப்பாமல் சொல்வதற்கு ரூபனின் படத்தொகுப்பு நன்கு துணைபுரிந்திருக்கிறது. எனினும், சில காட்சிகள் படத்தின் ஓட்டத்தில் ஒட்டாமல் தாவிச் செல்வதுபோல இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கலை இயக்குநர் வீரசமரின் பணி சிறப்பானதாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ள நுணுக்கமான விவரங்கள் அருமை. திலீப் சுப்புராயன் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் எளிமையாகவும் மிரட்டலாகவும் உள்ளன. பிருந்தா, பாஸ்கர் நடனம் நம்மையும் ஆடவைக்கிறது.
நாயகன் இயற்கை விவசாயம் செய்ய அழைக்கிறார். நல்ல விஷயம்தான். ஆனால், இன்றைய சூழலில் விவசாயம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பதைக் கொஞ்சமாவது காட்டியிருக்கலாம். இயற்கை விவசாயத்திற்கான சவால்களைப் பற்றிப் படம் பேசவில்லை. முறையான நீர் மேலாண்மை இல்லாத தமிழகத்தில் விவசாயம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரிந்துவைத்துள்ள இயக்குநர், அந்த நீர் மேலாண்மைக்கு ஒவ்வொரு ஏரியும் தூர் வாரப்பட வேண்டும் என்பதை மேலோட்டமாக வலியுறுத்தியிருக்கிறார்.

பிரச்சாரத்தன்மை, ஆழமின்மை, ஒரு சில இடங்களில் மிகை நடிப்பு போன்ற சில பிரச்சினைகள் இருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.
SHARE