Monday, July 23, 2018

விஜய்: சர்வதேச விருதுக்குப் பரிந்துரை!

SHARE

ஐஏஆர்ஏ-வின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் லண்டனைச் சேர்ந்த ஹெலன் இமுஃபி, ஐஏஆர்ஏ (INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS) என்கிற விருதுகளைத் தொடங்கியுள்ளார். “இனம், பாலினம் கடந்து ஒவ்வொரு துறையிலும் உள்ள கலைஞர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். நாம் வெற்றிக்கான ஏணியில் ஏறி, எப்போதும் இருக்கும் நிலையில் இருக்கும் மற்றவர்களை உயர்த்த வேண்டும்" என இந்த விருதுகளைத் தொடங்கியதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் 2014ஆம் ஆண்டுமுதல் உலகில் தலைசிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை. இளம் நடிகர், நடிகை, சிறந்த கலைஞர்கள், இளம் அழகுக்கலை நிபுணர்கள், வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள், மேடைக் கலைஞர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சுயாதீன பத்திரிகை மற்றும் சிறந்த இயக்குநர் என்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

2018ஆம் ஆண்டுக்கான ஐஏஆர்ஏ விருது பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சர்வதேச விருது பட்டியலில் சிறந்த சர்வதேச நடிகருக்கான பிரிவில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார். விஜய்யுடன் இணைந்து டேவிட் டென்னெண்ட் (டான் ஜோஹோ இன் ஷோ), ஜான் போயஹே (ஸ்டார் வார்ஸ்: த லாச்ட் ஜெடி), க்ரிஷ் ஆட்டோ (ஸ்விங்), டேனில் கலய்யுயா (கெட் அவுட்) போன்ற நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்ற முதல் தமிழ் நடிகர் விஜய் ஆவார்.

இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும் நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் வென்ற நடிகர்கள் விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இவ்விருது வழங்கும் விழாவானது செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி லண்டனில் சிவப்பு கம்பள வரவேற்போடு நடைபெறுகிறது.


SHARE