Tuesday, July 10, 2018

சிம்பு நடிக்கும் அரசியல் படம்!

SHARE

வெங்கட் பிரபு - சிம்பு இணைந்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 10) வெளியாகியுள்ளது.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க அதற்கான முனைப்பில் உள்ள நடிகர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் அரசியல் கருத்துகளை படங்களில் பேசுவதும் நடந்து வருகிறது. காலா படத்தில் ஒடுக்கப்பட்டோர்களின் அரசியலைப் பேசினார் ரஜினி. விஜய் நடிக்கும் சர்கார் படம் தமிழ் நாட்டின் கட்சி அரசியலை மையமாகக் கொண்டு உருவாகிவருகிறது. அந்தப் படத்தின் டைட்டில், படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அதை உறுதிப்படுத்தின.




சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக இணைந்திருக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாநாடு’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படமும் அரசியலை மையமாக வைத்தே உருவாகிறது என்பதை தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து யூகிக்கலாம். சுவரெழுத்துகள் போன்று டைட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் அரசியல் மாநாடு நடக்கும் விதமாகக் கொடிகளும், கட் அவுட்டுகளும் ஏராளமான விளக்குகளும் அமைந்துள்ளன. “தனியாக நின்றாலும் நல்லவை பக்கம் நில்” என்ற வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டிலிருந்து பல விஷயங்களில் தனது அரசியல் நிலைப்பாட்டை ஊடகங்கள் முன் பேசி வரும் சிம்பு படத்திலும் அதை பேசுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் ‘#aVPpolitics' என்று வெங்கட் பிரபுவின் அரசியல் என்ற பொருள்படும் படி குறிப்பிட்டுள்ளார்.




வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆர்.கே.நகர். சரவண ராஜன் இயக்கும் இந்தப் படத்திற்கு தமிழக அரசியலில் பெரும் கவனம் பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியை குறிப்பிடும் விதமாக டைட்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

’மாநாடு’ படத்தை வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு தற்போது பார்ட்டி படத்தின் வெளியீட்டில் கவனம் செலுத்திவருகிறார்.


SHARE