Thursday, July 12, 2018

விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குங்கள்!- ஐ.தே.க. அமைப்பாளர் அதிரடி!

SHARE

விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்ற அதிரடி கருத்து ஐ.தே.க. தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான நவீன் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், வடக்கில் அதிகரித்துச் செல்லும் வன்முறைகளை இல்லாதொழிக்க விடுதலைப் புலிகள் அவசியம் என்பதைப் போன்றதொரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.




அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”விஜயகலா மேடையில் ஆற்றிய உரை தொடர்பாக முதலில் சட்ட ரீதியான நிலைப்பாட்டை தெளிவாக அறிந்துக் கொள்ள வேண்டும். அவரது கருத்து குறித்து ஆராய்வதற்காக நியமிக்க குழுவினர் இது தொடர்பான நியாயமான முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், விஜயகலாவின் அமைச்சு பதவி மாத்திரமின்றி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நீக்கப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், வடக்கில் அதிகரித்துச் செல்லும் வன்முறைகளை இல்லாதொழிக்க விடுதலைப் புலிகள் அவசியம் என்பதைப் போன்றதொரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.




அவரது இக்கருத்து நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறாக நீடித்த சர்ச்சைகளை தொடர்ந்து விஜயகலா தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE