Saturday, September 1, 2018

கழுத்தை நெரித்தே படுகொலை செய்தேன்! – சந்தேகநபர் அதிர்ச்சி வாக்குமூலம்

SHARE

கிளிநொச்சியில் யுவதியொருவர் படுகொலை செய்யப்பட்ட சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர், குறித்த கொலையை தானே செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த யுவதியை கழுத்தை நெரித்தே கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபரே இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,




“சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருந்தது. ஒரு கட்டத்தில் என்னை தன்னுடன் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள். ஏற்கனவே நான் திருமணமானவன் என்பதால் எனக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருவரும் தற்கொலை செய்துகொள்ளவும் தீர்மானித்தோம்.

சம்பவ தினத்தன்று அவர்  கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும், அவரது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு,  அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சிக்கு வந்து கரடிப்போக்கு வழியாக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றோம்.

இதன்போது அவள் நஞ்சு மருந்து போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள். அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சினை ஏற்பட்டது. மேலும் அவள் தனது நிறுவன உடையில் வந்ததுடன் அவளது கழுத்தில் தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது  கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.




இறந்தவரை அடையாளம் காணக் கூடாதென்பதற்காகவே  நிறுவன உடைகளை அகற்றி, உடலை  கால்வாய்க்குள் இழுத்துச் சென்று போட்டேன். நள்ளிரவு வீட்டிற்கு வந்து மோட்டார் சைக்கிளை மறைத்துவைத்துவிட்டு, நானும் தற்கொலை செய்யவே முயற்சித்தேன். எனினும், எனது பிள்ளைகளை நினைத்து அதனை செய்யவில்லை” என சந்தேகநபர் வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது சந்தேகநபரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளதை வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடமைகள் வீசப்பட்ட இடமான கனகபுரம் பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் உடைமைகள் மற்றும் சந்தேகநபரின் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டன.




சந்தேகநபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
SHARE