Wednesday, September 26, 2018

கீர்த்தியின் ரீ-என்ட்ரி!

SHARE

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கும் பிரம்மாண்ட படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

மோகன் லாலின் திரைப்பயணத்தில் அவருக்கு அதிக ஹிட் கொடுத்த இயக்குநர்களின் பட்டியலில் பிரியதர்ஷனுக்குத் தனி இடம் உண்டு. மலையாளத் திரையுலகில் வெற்றிகரமான கூட்டணியாக வலம்வரும் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம். பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகிவரும் இந்தப் படத்தில் மோகன் லாலின் இளவயது கதாபாத்திரத்தில் அவர் மகன் பிரணவ் மோகன் லால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.




தனது நடிப்பு பயணத்தை மலையாளத்தில் தொடங்கிய கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார். 2014ஆம் ஆண்டு வெளியான ரிங் மாஸ்டர் படத்துக்குப் பின் அவர் மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகவில்லை. தற்போது மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் படம் மூலம் அவர் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

1505 முதல் 1601ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, நெடுமுடி வேணு, சித்திக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நவம்பர் 1ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
SHARE