Tuesday, September 25, 2018

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி விவகாரம் – நீதிமன்றக் கட்டளை இன்னும் ஒரு மணிநேரத்தில்..!

SHARE
“தியாகி திலீபனின் நினைவுத் தூபி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. அந்த தூபியை அமைக்கும் முகவராகவே யாழ்ப்பாண மாநகர சபை உள்ளது. எனவே திலீபனின் நினைவுத் தூபி விவகாரத்தில் யாழ்ப்பாண மாநகர சபையை நீதிமன்றுக்கு இழுக்க முடியாது”



இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்.




நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பி வேலியை அகற்றுவதற்கும் அங்கு தீலிபனின் உருவப்படம் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பந்தலை அப்புறப்படுத்துவதற்கும் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு கோரி, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

யாழ். மாநகர சபை ஆணையாளர் மன்றில் தோன்றினார்.




அவர் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார். பொலிஸ் அதிகாரியும் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று, இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்டளை வழங்குவதாக அறிவித்து வழக்கை ஒத்திவைத்தது.




இதேவேளை, நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் கடந்த 10 நாள்களாக அஞ்சலி நிகழ்வை முன்னெடுக்கும் தரப்பினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் மன்றில் தோன்றி சமர்ப்பணம் செய்ய அனுமதி கோரினார்.




எனினும் வழக்கில் எதிராளியாகக் குறிப்பிடப்படாத தரப்புக்கு சமர்ப்பணம் முன்வைக்க மன்று அனுமதி மறுத்தது.
SHARE