Sunday, September 16, 2018

சீமராஜா - திரை விமர்சனம்

SHARE

மாஸ் ஹீரோவுக்கான ஓப்பனிங் பாடல், சண்டைக் காட்சிகள், பில்டப் வசனங்கள், காதல் காட்சிகள் என்றுகளமிறங்கியிருக்கிறார் சிவா. இயக்குநர் பொன்ராமின் உதவியுடன் சிவகார்த்தியின் மாஸ் கொடி உயரமாகவே பறக்கிறது.

பொறுப்பிருந்தாலும், பொறுப்பற்ற தன்மையோடு சிங்கப்பட்டி சமஸ்தானத்தில் காதல் வயப்பட்டுச் சுற்றிக்கொண்டிருக்கிறான் ஒரு இளைஞன். தனது தந்தையின் இறப்பிற்குப் பின் தான் எந்த வம்சத்தைச் சார்ந்தவன் என்று தனது தாத்தா மூலம் அறிந்து வீறு கொள்கிறான். தமிழகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினையை எதிர்த்துத் தனது சமஸ்தானத்திற்குட்பட்ட பகுதியில் போராடித் தீர்வுகாண்கிறான்.
பொன்ராம்-சிவகார்த்திகேயன்-சூரி மூன்றாவது முறை கூட்டணி அமைத்திருக்கும் இந்தப் படமும் அவர்களது முந்தைய படங்களின் டெம்ப்லேட்டிலேயே இருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அடுத்தவனுக்காக வாழ வேண்டாம் உங்களுக்காக வாழுங்கள் என்பது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செய்தி.கூட்டுக் குடும்பத்தைக் காப்பீர், பழமையை மறவாதீர் என்பது ரஜினி முருகன் விடுத்த செய்தி. மண்ணின் பெருமை பேசும் சீமராஜா, எக்காரணத்தைக் கொண்டும் நிலத்தை விற்காதீர்கள், விவசாயத்தை விட்டுவிடாதீர்கள் என்றுசொல்கிறார்.ஜமீன் குடும்பம் என்றதுமே அதைக் கலாய்க்கும் வேலையில் இறங்காமல், கவனமாகவும் கொஞ்சம் யதார்த்தமாகவும் கையாண்ட விதம் பாராட்டுதலுக்குரியது. படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் முக்கியமானது. நேரடியாகவே அரசை எதிர்க்கும் வசனங்கள் உள்ளன. ‘தமிழகத்திற்கு எந்தத் திட்டம் வந்தாலும் ஏன் எதிர்க்கிறீர்கள்’ என்று கேட்கும்போது, ‘எதிர்க்கும் மாதிரியான திட்டத்தை ஏன் கொண்டு வரீங்க’ என்று சிவகார்த்திகேயன் சொல்லும் பதில் ஒரு உதாரணம்.
படம் கலகலப்பாகப் போய்க்கொண்டிருக்கும்போது, திடீரென்று 14ஆம் நூற்றாண்டிற்குப் போய், மாலிக்காஃபூர், அலாவுதீன் கில்ஜி, வில்முனை வியூகம் எனத் திகைப்பூட்டுகிறார்கள். கடம்பவேல் ராஜா யார், வலரி என்ற ஆயுதத்திற்காகச்சொல்லப்படும் கதை உண்மையா, புனைவா என்பது குழப்பமாக உள்ளது. தனியாகப் பார்க்கும்போது இந்தப் பகுதி நன்றாகஇருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஜாலி திரைப்படத்திற்குள் இந்தப் பகுதி ஒட்டவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் முகலாயப் படையினர் நிலத்தைச் சூறையாட வந்தார்கள். அதன் பின் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். தற்போது வட இந்தியர்கள் இங்கு மறைமுகமாகப் படை எடுத்துள்ளனர் என்பதைச் சொல்வதற்காகவே இந்தக் கதை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நடனம், காமெடி, காதல், வீரம் என்று மாஸ் ஹீரோவுக்கான வேலைகளைக் கச்சிதமாகச் செய்கிறார் சிவகார்த்தி. தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு அடிவாங்கி ஹிட் ஆனவர் வடிவேல். சொல்லால் அடி வாங்கி வெற்றி பெற்றிருப்பவர் சிவகார்த்தி. படத்தில் அவருக்கான பில்டப் வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருந்தாலும், சக நடிகர்கள் மூலம் மொக்கை வாங்கியே ஹிட் அடிக்கும் சூத்திரத்தைத் தனது வெற்றிக்கான உத்தியாக வைத்திருக்கிறார் சிவா. இதற்குஉறுதுணையாக சதீஷ், சூரி போன்றவர்கள் இருக்கிறார்கள்.


ராஜா வேடத்தில் களையாக இருக்கிறார் சிவகார்த்தி. ராஜமவுலியிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்கலாம்.
அழகுப் பதுமையாகத் திரையில் தோன்றுகிறார் சமந்தா. சொந்தக் குரலில் பேசியிருப்பது பாராட்டுக்குரியது. சிறப்புத்தோற்றத்தில் வரும் கீர்த்தி சுரேஷ், அரசியாகத் தோன்றிக் கவர்கிறார்.

சிம்ரன் ‘திமிரு’ படத்தில் வரும் ஸ்ரேயா ரெட்டி மாதிரி முயற்சித்திருக்கிறார், ஆனால், அது உங்களுக்கு ஒத்து வரலீங்க மேடம். சிம்ரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் டப்பிங் குரலையும் தாங்க முடியவில்லை.

சிக்ஸ் பேக்கிற்காக உழைத்த சூரி, நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும்கூட உழைக்கலாம். எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி பேசி, நடிக்கிறார். ஒரு சில இடங்களில் சிரிப்பு வந்தாலும், பல இடங்களில் சலிப்புத் தட்டுகிறது. படத்தில் தொய்வு ஏற்படும் போது காமெடி டிபார்ட்மென்ட்டில் நம்மை கவனிக்க வைப்பவர் `பனானா' பவுன்ராஜ். ' பத்து பைசா பீடிக்குஆசைப்பட்டு...' என பவுன்ராஜ் சொல்லும் ஃப்ளாஷ்பேக்குக்கு சிரிப்பில் அதிர்கிறது அரங்கம்.
நெப்போலியன், லால் ஆகியோர் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். மு.ராமசாமி கதை சொல்லப் பயன்பட்டிருக்கிறார். மொட்டை ராஜேந்திரன்,லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோர் பொழுதுபோக்குப் படம் என்னும் வண்டிக்குத் தவிர்க்க முடியாத உதிரி பாகங்களாக மாறியிருக்கிறார்கள்.பாலிவுட் போன்றதொரு காட்சி மொழியைத் தனது ஒளிப்பதிவில் தருபவர் பாலசுப்ரமணியம். இதிலும் அதைக்கையாண்டிருக்கிறார். ஃபிளாஷ்பேக் காட்சிகள், திருவிழாக் காட்சிகள் இரண்டிலும் முத்துராஜின் கலை இயக்கம் கவனிக்கவைக்கிறது. சிவா-பொன்ராஜ் கூட்டணியின் ஆஸ்தான இசையமைப்பாளரான இமான் இதிலும் சிவாவை தூக்கிவிட்டிருக்கிறார். ‘ஊதா கலர் ரிப்பன்’, ‘ரஜினி முருகன்’, ‘என்னாம்மா இப்படி பண்றீங்களேம்மா’ வரிசையில், ‘சீமராஜா’, ‘வரும் ஆனா வராது’ போன்ற பாடல்களைக் குழந்தைகளிடம் கொண்டு சென்றிருக்கிறார். பின்னணி இசை பரவாயில்லை. தினேஷ், பாபா பாஸ்கர், சோபி ஆகியோரின் நடன அமைப்பு ரசிகர்களையும் ஆடவைக்கிறது.
வலுவில்லாத திரைக்கதை, லாஜிக் இல்லாமல் நகர்கிறது. நடுநடுவே நகரவும் தடுமாறுகிறது. ஆனால், மாஸ் ஹீரோக்கான மசாலா கதையில் சமகாலப் பிரச்சினையைக் கலந்து தந்திருக்கும் ‘சீமாராஜா’ பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தருகிறது.
SHARE