Friday, October 5, 2018

திரை விமர்சனம்: 96

SHARE

அழகி, ஆட்டோகிராஃப் போன்ற திரைப்படங்களின் வரிசையில் இன்னொரு ‘பசுமையான நினைவுகளின்’ கொண்டாட்டம்தான், 96. பாலின பேதமின்றி, பதின்ம வயதுகளின் விடலைப் பருவத்தில் இனக்கவர்ச்சி சார்ந்த காதலில் விழாத நபர்களே இருக்க முடியாது. புத்தகத்தில் ஒளித்து வைத்த மயிலிறகு போல அவ்வப்போது அந்த நினைவுகளை மனதிற்குள் தடவிப் பார்ப்பவர்கள் அநேகம் இருப்பார்கள். அப்படிப்பட்ட சஹஹிருதயர்களின் பழைய மனக்காயங்களுக்கு வடிகாலாகவும் மருந்தாகவும் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நுண்ணிய இழையை எடுத்துக்கொண்டு கவிதையான தருணங்களாலும் இயல்பான நகைச்சுவையுடனும் அமைந்த காட்சிகளின் வழியாகவும் அதை வளர்த்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சி.பிரேம்குமார். (‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர். அந்தத் திரைப்படமே அவரது சொந்த அனுபவத்தின் மீதாக உருவானதுதான்).
விஜய் சேதுபதி (கே.ராமச்சந்திரன் என்கிற ராம்) ஒரு டிராவல் போட்டோகிராஃபர். தொழில் சார்ந்து இந்தியா முழுக்கச் சுற்றுபவர். தஞ்சாவூர் பக்கம் செல்லும்போது இளமையில் தான் படித்த பள்ளியைக் காண்கிறார். பழைய நினைவுகள் கிளர்ந்தெழ, இளமைப் பருவ நண்பர்களை உடனே அழைக்கிறார். 96-ம் வருடத்தில் படித்த அனைவரும் கூடி சென்னையில் ஒரு நாள் சந்திப்பதென்று முடிவாகிறது. அந்தச் சந்திப்பில் ஒருவரின் பிரத்யேக வருகைக்காக நெஞ்சு படபடப்புடனும், மூச்சுத்திணறலுடனும் காத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அது த்ரிஷாவிற்காக. (ஜானு என்கிற ஜானகி தேவி).

சம்பிரதாயச் சந்திப்புக் கூட்டம் முடிந்து ராமிற்கும் ஜானுவிற்கும் இடையில் பின்னிரவில் நீளும் உரையாடலும் அந்த அழகான இரவும்தான் இந்தத் திரைப்படம். இவர்களுடைய இளமைப்பருவத்தின் பள்ளிக்கூடக் காட்சிகள் சுவாரசியமாகவும் படத்திற்கு உறுதுணையாகவும் அமைந்திருக்கின்றன.
படத்திற்குப் படம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே போகிறார் விஜய் சேதுபதி. இவரை எந்த வகைமையில் அடைப்பது என்றே புரியவில்லை. தனது இயல்பான, அநாயசமான நடிப்பால் அசத்தியிருக்கிறார். ஏறத்தாழ நாற்பது வயதிலும் பதின்ம வயது இளைஞனின் முகபாவத்தையும் தோரணையையும் தருவது சிறப்பு. 22 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவைப் பார்க்கும் அந்தத் தருணத்தில் முகத்தைப் பார்க்க முடியாமல்  நெஞ்சு படபடக்க, மூச்சுத் திணறி மயங்கிச் சாயும் காட்சி முதற்கொண்டு நினைவுப் பொருட்களால் நிரம்பியிருக்கும் பெட்டியை மூடும் இறுதிக் காட்சி வரை விஜய் சேதுபதியின் ராஜ்ஜியம்தான். சின்ன சின்ன  அழகான முகபாவங்களால், உடல்அசைவுகளால் ‘ராமை’ நிரப்பியிருக்கிறார்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸிக்குப் பிறகு ஓர் அருமையான பாத்திரம் த்ரிஷாவிற்கு. தன் வாழ்வையே புரட்டிப் போட்ட அந்த அபத்தமான பிழையை எண்ணிக் கதறும் காட்சி முதற்கொண்டு பல காட்சிகளில் பிரமிக்க வைத்திருக்கிறார். ‘சந்தோஷமா இருக்கேனான்னு தெரியல. நிம்மதியா இருக்கேன்’ என்பது போன்ற வசனங்கள், பெரும்பாலான சராசரிப் பெண்களைப் பிரதிநிதிப்படுத்துவதாகவும் ரகசியப் பெருமூச்சுகளாகவும் பதிவாகியிருக்கின்றன. பழைய காதலின் ஈர்ப்பிற்கும் சமகால நடைமுறைக்கும் இடையில் தத்தளிப்பதை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கலாசாரக் காவலர்கள் பதற்றம் அடையாதவாறு, இந்த உறவைக் கண்ணியமான எல்லைக்குள் நின்று பயணம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஜனகராஜை நீண்ட காலம் கழித்து திரையில் பார்க்க முடிகிறதே என்கிற ஆச்சரியமும் மகிழ்ச்சியும் இருந்தாலும் அவரின் பாத்திரம் சரியாகப் பயன்படுத்தப்படாத வகையில் சோகம் ஏற்படுகிறது. விஜய் சேதுபதியின் சமகால நண்பர்களாக பகவதி பெருமாள் (பக்ஸ்), தேவதர்ஷணி, ‘ஆடுகளம்’ முருகதாஸ் போன்றவர்கள் சிறப்புற தங்களின் பங்கைச் செய்திருக்கின்றனர். ஒரு கூட்டத்தை ஒருங்கிணைப்பவர் செய்யும் பந்தாவையும் பதற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் பக்ஸ். “ஆமாம்.. அப்ப கண்டுக்காம.. இப்ப வந்து விசாரி” என்று பள்ளித் தோழியிடம் சிணுங்கும் முருகதாஸ் நகைக்க வைக்கிறார். “டேய் எதுவும் தப்பாயிடாதுல்ல’ என்று கவலைப்படும் தேவதர்ஷிணியின் தவிப்பு சுவாரசியமான நகைச்சுவை.
இவர்களின் உருவத்தோற்றத்தை ஒத்திருக்கும் நபர்களையே இளமைப்பருவக் காட்சிகளுக்கு இயக்குநர் தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பு. இளமையான விஜய் சேதுபதியாக, எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நன்றாக நடித்துள்ளார். ‘ஜானு’வாக நடித்திருக்கும் கெளரி கிஷணின் பங்களிப்பும் அருமை. தேவதர்ஷிணியின் இளமைப் பருவப் பாத்திரத்திற்கு அவருடைய மகளே நடித்திருப்பது சுவாரசியத்தையும் இயல்பையும் அளித்திருக்கிறது. ஒரேயொரு காட்சியில் வந்தாலும் ‘கவிதாலயா கிருஷ்ணன்’ மனதைக் கவர்கிறார்.

படத்தின் பெரும் பலங்களுள் ஒன்றாக இருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. குழலும் பியானோவும் தந்தி வாத்தியங்களும் படம் முழுவதிலும் மென்மையாக வருடிக்கொண்டே இருக்கின்றன. பாடல்கள் இனிமையாக இருந்தாலும் அவற்றில் சில பொருத்தமற்ற இடங்களில் வந்து பொறுமையைச் சோதிக்கின்றன. தொண்ணூறுகளின் காலக்கட்டம் என்பதால் தேவையான இடங்களில் இளையராஜாவின் இசை பொருத்தமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு காலக்கட்டத்திய தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனதில் உறைந்திருக்கும் இசை என்பதால் அது மட்டுமே பல வெற்றிடங்களை நிரப்பிச் செல்கிறது. மின்தடை ஏற்படும் இருளில் ‘ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ, ஆசை வைப்பதோ அன்புத் தொல்லையோ” என்று ஜானு பாடும் வரிகள்தான் இத்திரைப்படத்தின் மையம் என்று கூட சொல்லலாம். ராமுவின் நீண்ட வேண்டுகோளை அதுவரை இரக்கமின்றி மறுத்து, பொருத்தமான இடத்தில் பாடுவதால் இந்தப் பாடலின் சுவை கூடுகிறது.

தஞ்சையின் பள்ளிக்கூடம், பாலம் முதற்கொண்டு சென்னையின் பின்னிரவு வரை அழகியல்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கிறது, சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு.
‘இணையாத காதல், காவியமாகும்’ என்பார்கள். அந்த வகையில் சில காவியத் தருணங்கள் இந்தத் திரைப்படத்தில் உள்ளன. இத்திரைப்படத்தை ‘காண வேண்டிய சித்திரம்’ என்பதை விடவும் ‘உணரப்பட வேண்டிய ஒரு நல்ல அனுபவம்’ என்றே சொல்லலாம். அநாவசியமான இடைச்செருகல்கள் இல்லாமல் தேவையான காட்சிகளோடு இயல்பாக பயணிக்கிறது. படத்தின் பிற்பகுதியில் மட்டும் இழுவையாக நீண்டிருக்கும் சில காட்சிகளை இறுக்கிப் பிடித்திருக்கலாம்.
சுஜாதாவின் சிறுகதை ஒன்று நினைவிற்கு வருகிறது. பணிக்காலத்தில் பார்த்த தன் ஆங்கிலோ –இந்திய நண்பரை வைத்து அந்தச் சிறுகதையை எழுதியிருப்பார் சுஜாதா. ஒரு பெண்ணை உருகி உருகிக் காதலிப்பார் அந்த நண்பர். திருமணம் கைகூடாத நிலையில், காதலிக்குத் திருமணமாகி வெளிநாட்டுக்குச் சென்று விட்டாலும் அவளின் நினைவாகவே பல வருடங்கள் காத்திருப்பார். வருடா வருடம் கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்புவார். காதலிக்கு நரை கூடி கிழப்பருவமெய்தி, கணவனை இழந்து பிள்ளைகளின் திருமணம் முடித்து திரும்பி வரும் அந்திமக் காலத்தில் இணையும் வரை இந்த பிரம்மச்சரியக் காத்திருப்பு நீளும். இந்தப் பாத்திரத்தைப் பற்றி உளவியல் மருத்துவரிடம் சுஜாதா விசாரிக்கும் போது ‘He is not normal’ என்றாராம் மருத்துவர்.

இனக்கவர்ச்சி, எஸ்ட்ரோஜன் – ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் என்று பல்வேறு விதமாக இளமைக்காதலை ஆராய்ச்சி செய்ய முடிந்தாலும் அது தரும் பிரத்யேகமான இன்பமும் வலியும் அறிவால் அல்லாமல் இதயத்தால் உணரப்பட வேண்டியது. அந்த அனுபவத்தை மிகச்சிறப்பாகக் கடத்தியிருக்கிறது 96.

SHARE