Tuesday, October 16, 2018

மனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்!

SHARE
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

“எனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்ப்பதற்காக அழைத்துச் செல்ல முற்பட்டேன். அவர் என்னுடன் வர மறுத்து தேவாலயத்திலிருந்து வந்துவிட்டார். வீதியில் சென்ற அவரை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றேன்.

அதனையே ஊடகங்கள் பெண் கடத்தல் என செய்தி வெளியிட்டுவிட்டனர்” என்று முச்சக்கர வண்டிச் சாரதி பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.




இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் யாழ்.செம்மணி பகுதியில் (யாழ்.வளைவுக்கு) அருகில் இடம்பெற்றது.

சம்பவத்தையடுத்து பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பிரகாரம் பெண் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முச்சக்கர வண்டியின் பதிவிலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த போது , அந்த முச்சக்கர வண்டி நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒருவருடையது என கண்டறிந்தனர். அந்த இளைஞனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.




அதன் போது முச்சக்கர வண்டிச் சாரதி, தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் , அதனால் செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து சென்றதாகவும் , அதன் போது வருத்தம் குணமடையாது அவரது அட்டகாசம் கூடியதனால் , அவரை கட்டி முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிச் சாரதியிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
SHARE