Sunday, October 28, 2018

ஊழல்வாதிகளுக்குத் துணைபுரிந்ததால் ரணில் பதவிநீக்கம்: ஜனாதிபதி!

SHARE
நல்லாட்சி அரசாங்கத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும், ஊழல்வாதிகளுக்குத் துணைபுரியும் வகையிலும் செயற்பட்டதாலேயே ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

குறித்த உரையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டு மக்களது நலனைக் கருத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்தேன்.  சில விடயங்களைப் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாமையின் காரணமாகவே, இந்த தீர்மானத்தை நான் எடுத்தேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களே உங்கள் கட்சிக்கு நாட்டை நேசிக்கக் கூடிய, பொதுமக்களின் துயரங்களை உணரக்கூடிய புதிய ஒரு தலைவரை நியமித்துக் கொள்ளுங்கள்.

அப்படி செய்தால் மாத்திரமே காமினி, சேனநாயக்க, உள்ளிட்ட பலர் கடினப்பட்டு உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியைக் காப்பாற்ற முடியும். உங்கள் அனைவரையும் நாட்டின் நலன் கருதி என்னுடன் இணைந்து பணியாற்ற அன்புடன் அழைக்கிறேன்.

அரசிலயமைப்பை மீறியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன். தேசிய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட சில விடயங்கள், நாட்டு மக்களுக்கு பாரிய அநீதிகளை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தன.

சில கொடுக்கல் வாங்கல்கள் முறையற்ற விதத்தில் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் நான் முழுமையாக விசாரிக்க எதிர்பார்க்கின்றேன். தற்போதைய பொருளாதாரச்சுமை ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டது என்பதை கூறுகிறேன்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் விலைமனு கோரல் இன்றி முன்னெடுக்கப்பட்டன.  இதற்கு எதிராக நான் குரல் கொடுத்தவன். ஆனால் அதனை மீறி சில விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. பல ஊழல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

குறிப்பாக கண்டி கொழும்பு அதிவேக வீதி அமைப்பதில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி  என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தநாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பினை எதிர்காலத்தில் நிறைவேற்றுவேன்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் நாட்டு மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய கொள்கை தொடர்பிலேயே சிந்திக்க வேண்டும். இந்த நாட்டிலேயே எவரும் ஏற்காத அரசியல் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.

இதனால் எனது குடும்பமும் பல தடவைகள் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டது” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
SHARE