Friday, October 5, 2018

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்!

SHARE

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆய்வுக் குழுவிடம் மனு அளிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆலையை மூட வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். இது தொழில்துறை வளர்ச்சிக்கு எதிரானதல்ல. பெரிய ஆலைகள் வர வேண்டும். ஆனால், மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு சேதமில்லாமல் அது நிகழ வேண்டும்" என்று வலியுறுத்தினார்.




பெட்ரோல், டீசல் விலையைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே குறைத்துள்ளனர். இன்னும் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஜய்யின் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு, “தம்பிக்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். ஊழலை ஒழிப்பேன் என்று அவர் கூறுவது நல்ல விஷயம்தான். விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வரவேற்பேன்” என்று பதிலளித்தார்.

மேலும், “கிராமசபைக் கூட்டத்தை பொறுத்தவரை சக்கரம் தரையில் அழுத்தமாகப் பிடிபட்டுள்ளது. முன்னேற்றத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. கிட்டதட்ட 6 ஆயிரம் கிராமசபை கூட்டங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு நிகரான பலம் கிராம சபைகளுக்கு உள்ளன. இதை மக்கள் நம்ப வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.




“தேர்தல் வந்தால் பூத் கமிட்டி அமைப்பதற்குகூட எங்களிடம் ஆள் இல்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதற்கான , பதில் கமிட்டி இயங்கும்போது தெரியும். என்ன செய்ய வேண்டுமோ, அதை அழுத்தமாக, நியாயமாகச் செய்துகொண்டிருக்கிறோம்” என்றும் கமல் கூறினார்.

மழை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை முன்பு எடுத்த மாதிரி அல்லாமல், நல்ல முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
SHARE