Tuesday, October 30, 2018

ஜே.வி.பியின் கோரிக்கைக்கு இணங்கவே மைத்திரியை ஜனாதிபதி ஆக்கினோம்: ரணில்

SHARE

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஜே.வி.பியின் கோரிக்கைக்கு இணங்கவே மைத்திரிபால சிறிசேனவை நாம் பொதுவேட்பாளராக களமிறக்கினோம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டு மக்களின் நம்பிக்கை, ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இங்கு, பல்வேறு இன, மத, மொழிகளைக் கொண்ட தலைவர்கள் உள்ளார்கள். நாம் அனைவரும் ஐக்கிய தேசிய முன்னணி ரீதியாகவே இன்று கொழும்பில் கூடியுள்ளோம்.

மீண்டும், நாட்டில் ஜனநாயகம், அமைதியை நிலைநாட்டி அபிவிருத்தியை நோக்கி செல்லவே இன்று கைகோர்த்துள்ளோம். அன்று, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தான் ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுவேட்பாளரை நியமித்தோம்.

இதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்த பலரும் எம்முடன் இணைந்து கொண்டார்கள். ஜனநாயகத்தை நிலைநாட்ட நாம் அன்று போராடினோம். 2015, ஜனவரி 8 ஆம் திகதி பொதுவேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவை நாம் ஜனாதிபதியாக நியமித்தோம். நானும், பிரதமராக பதவியேற்றுக்கொண்டேன்.

19 ஆவது திருத்தச்சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள், ஊடக சுதந்திரம் என்பவற்றை நாம் முழுமையாக கொண்டுவந்தோம். மக்களுக்கு அச்சமில்லாமல் வாழும் ஒரு சூழலையும் நாட்டில் நாம் உருவாக்கினோம்.

இவற்றை நிலைநாட்டித்தான் நாம் முன்னோக்கிச் சென்றோம். ஆனால், நாம் எதிர்ப்பாராத நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


SHARE