Friday, October 12, 2018

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல படிகள் அமைக்கும் பணியை தடுத்துநிறுத்தியது பொலிஸ்!

SHARE

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏணிபடி அமைக்கும் பணிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர் என ஆலய நிர்வாகத்தின் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலை உச்சிமலைக்கு செல்வதற்கு படிகள் இல்லாமல் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அடியவர்கள் அங்கு சென்று வழிபாடுகளை மேற்க்கொண்டு வருகின்றனர். அடியவர்களின் நன்மை கருதி ஆலய நிர்வாகத்தினரால், பண்பாட்டு அலுவல்கள் அமைச்சால் படிகள் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக அவற்றை அமைக்கும் வேலையை ஆரம்பித்தனர்.

தற்போது அவை கட்டி முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் ஏணிப்படிகளை அமைக்கும் கடை உரிமையாளரை நெடுங்கேணி பொலிஸார் அழைத்து அவற்றை அமைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு தொடர்ந்து வேலையை முன்னெடுத்தால் கைது செய்வோம் என எச்சரித்தனர். அதனால் ஏணிப்படிகளை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ஆலய நிர்வாகத்திடமும் நெடுங்கேணி பொலிஸார் குறித்த வேலையை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளினால் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபைச் செயலாளர் தமிழ்செல்வன் மேலும் தெரிவித்தார்.




SHARE