Friday, October 26, 2018

யாழில் குடும்ப தகராறு: மகனை கத்தியால் வெட்டிவிட்டு தந்தை தற்கொலை!

SHARE

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தந்தை மகனை கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர், தந்தை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கரவெட்டி, தேவரையாளி எனும் இடத்தில் நேற்று  (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அவ்விடத்தை சேர்ந்த பாக்கியராஜா (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் குடும்ப தகராறு காரணமாக நேற்றிரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்நிலையில் திடீரென கோபமடைந்த தந்தை வீட்டில் இருந்த கத்தியால் மகனை இரண்டு தடவைகள் வெட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் வீட்டார் கத்தி வெட்டுக்கு இலக்கான மகனை மத்திகை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பின்னர் வைத்தியசாலை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அவர்கள் விசாரணைக்காக  குறித்த வீட்டிற்கு சென்றபோது,  தந்தை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE