Wednesday, October 31, 2018

நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு!

SHARE

நாட்டின் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக சற்று முன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

நிதி மற்றும்  பொருளாதார  அமைச்சராக இன்று புதன் கிழமை  கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் விலை சூத்திரம் மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் மத்தியிலே பிரதமர் பதவியினை பொறுப்பேற்றுள்ளேன். மிகுதியாகவுள்ள காலப்பகுதியில் நாட்டின்  தேசிய பொருளாதாரத்தினை மேம்படுத்தி தவறவிட்ட தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்த புதிய பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ, 2015.01.09 ஆம் திகதி  ஆட்சி பொறுப்பினை  மனமகிழ்வுடனே கையளித்தேன். 

ஆனால் தற்போது அந்நிலைமை  காணப்படவில்லை நாட்டு மக்களின் நெடுநாள் எதிர்பார்ப்புக்கள்  இனி நிறைவேற்றப்படும்.

2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பினை கையளிக்கும் பொழுது   அரசாங்கத்திற்கும் , மக்களுக்கும் எவ்விதமான அழுத்தங்களையும் கொடுக்காமல்  செயற்பட்டேன். ஆனால்  அந்நிலைமை தற்போது காணப்படவில்லை. 

நாடு சர்வதேசம் மற்றும் உள்ளுர் மட்டத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டமையினை கடந்த காலங்களில்  காணக்கூடியதாக   இருந்தது பலரது  கேள்விகளுக்கு தீர்வு வழங்கும் முகமாகவே  ஆட்சி மாற்றம் இடம்பெற்றது.

பல நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் மத்தியிலேயே பிரதமர் பதவினை பொறுப்பேற்றுள்ளேன்.  ஜனாதிபதி  பிரதமராக  என்னை நியமித்தமையின் பிரதான நோக்கம் தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின்  தொடர்ச்சியினை  பற்றி பேசுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. மாறாக தீர்மானிக்கப்பட்ட இலக்குகளே மழுங்கடிக்கப்படும் என்றார்.
SHARE